ஸ்டீவ் ஸ்மித் நின்னா குத்தம், நடந்தா குத்தம்... முடியல!
Recommended Video

நியூயார்க்: ஸ்டீவ் ஸ்மித் நியூயார்க் நகரில் தனிமையில் பாரில் சோகமாக அமர்ந்து பீர் அருந்திக் கொண்டிருப்பதாக நேற்று ஒரு செய்தி வலம் வந்தது. கிட்டத்தட்ட பல நாடுகளின் முக்கிய செய்தி நிறுவனங்கள் கூட உண்மை நிலை தெரியாமல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. எதிர்மறையான அந்த செய்தியின் உண்மைப் பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது.
நேற்று ஸ்மித் பற்றி, “ஏமாற்றமுடன் ஸ்மித், நியூயார்க்கில் ஒரு சோகமான காட்சி” என தலைப்பிட்டு, ஸ்மித் பாரில் அமர்ந்து பீர் அருந்துவது போன்ற படங்களுடன் செய்தி வெளியானது. வேகமாக இணையத்தில் பரவிய இந்த செய்தி பல அச்சு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களிலும் வெளியானது.
சில பத்திரிகைகள், இதை மேலும் பெரிதாக்கி ஸ்டீவ் ஸ்மித்தை திருமணம் செய்யவிருக்கும் டானி வில்லிஸ், இத்தாலியில் தன் விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், ஸ்மித் நியூயார்க்கில் சோகமாக அமர்ந்து மது அருந்தினார் என டானி வில்லிஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்ட விடுமுறை புகைப்படங்களோடு, ஸ்மித் மது அருந்தும் படத்தையும் இணைத்து செய்திகள் வெளியிட்டன.

தவறென்ன இருக்கிறது
இந்த செய்திகள் வெளியான போதே, இது தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஒரு மனிதர் பாரில் அமர்ந்து மது அருந்துவதில் என்ன இருக்கிறது? இது போன்ற செய்திகளை கவர் ஸ்டோரி போல வெளியிடுவது தவறு என சிலர் கூறினர்.

என்ன நடந்தது
உண்மையில் ஸ்டீவ் ஸ்மித், கனடாவின் உள்ளூர் தொடரான, குளோபல் T20 யில் பங்கேற்க உள்ளார். அதன் காரணமாக, தற்போது அமெரிக்காவில் தங்கி ஒய்வு எடுத்துவிட்டு, அண்டை நாடான கனடாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஒரு பிரச்சினையும் இல்லை
இது பற்றி, கோட்சா4லைப் (GOTCHA4LIFE) என்ற தொண்டு நிறுவனத்தில் ஸ்மித்துடன் இணைத்து பணியாற்றி வரும் கஸ் வோர்லன்ட் என்பவர் கூறுகையில், ஸ்மித் என்னுடன் பல பள்ளிகளுக்கு வந்து குழந்தைகளுடன் உரையாடியுள்ளார். அதே போல், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர், ஹியூக் ஜாக்மன் (HUGH JACKMAN) தன் தொண்டு நிறுவனத்தில் பங்கு பெறும் நண்பர் என்ற அடிப்படையில், ஸ்மித் மற்றும் ஜாக்மன் சந்திப்புக்கு அமெரிக்காவில் தான் ஏற்பாடு செய்ததாகவும், அவர்கள் அங்கே தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பேசிவிட்டு, வரும் வழியில் ஸ்மித் பாருக்கு சென்றுள்ளார். அவர் இயல்பாகவே இருப்பதாக வோர்லன்ட் கூறினார்.

சித்தரிக்கப்படும் ஸ்மித் மற்றும் வார்னர்
பந்து சேதப்படுத்திய விவகாரம் மற்றும் ஓராண்டு தடைக்கு பின், ஸ்மித் மற்றும் வார்னரை பற்றிய தனிப்பட்ட செய்திகள் உலா வர ஆரம்பித்தன. தற்போது அது எல்லை மீறி அவர்களை பற்றி எதிர்மறையாக சித்தரிக்கும் அளவு சென்றுள்ளது. தற்போது ஸ்மித் மற்றும் வார்னர், கனடாவின் குளோபல் T20 உள்ளூர் தொடரில் விளையாட இருக்கிறார்கள். இதில் தங்கள் பேட் மூலம் தங்களுக்கு எதிராக செய்தி பரப்புபவர்களுக்கு பதில் அளிக்கிறார்களா? என பார்ப்போம்.


Click it and Unblock the Notifications