செம டி20 மேட்ச்.. 3 சூப்பர் ஓவர்.. 0 ரன்னுக்கு ஆல் அவுட்.. இதயத்தை எகிற வைத்த நேபாளம் - நெதர்லாந்து
கிளாஸ்கோ: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நெதர்லாந்து அணி மாபெரும் சாதனை படைத்துள்ளது. நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று சூப்பர் ஓவர்கள் வரை சென்று போட்டியை வென்றது. இந்தப் போட்டியில் நேபாள அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் மிகப் பெரும் படுமோசமான சாதனையைப் பதிவு செய்தது.
மூன்று சூப்பர் ஓவர்கள் வரை சென்ற முதல் சர்வதேச டி20 போட்டி என்ற சாதனையும் இதன் மூலம் நிகழ்த்தப்பட்டது. இந்தப் போட்டியின் முதல் இரண்டு சூப்பர் ஓவர்களும் டை ஆனது. அதனால் மூன்றாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த மூன்றாவது சூப்பர் ஓவரில் நேபாள அணி நான்கு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ரன் எதும் எடுக்கவில்லை. அதை பயன்படுத்தி நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரில் வென்றது.

நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து நேபாள அணி பேட்டிங் செய்த 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. போட்டி சமனில் முடிந்ததால், அடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதல் சூப்பர் ஓவர்: நேபாள அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் உட்பட மொத்தம் 19 ரன்கள் சேர்த்தது. அடுத்த பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி முதல் சூப்பர் ஓவரில் அதேபோல இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தது. அந்த அணியும் 19 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.
இரண்டாவது சூப்பர் ஓவர்: நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் மேக்ஸ் ஓ'டௌட் அதிரடியாக ஆடினார்கள். அவர்கள் இரண்டு சிக்ஸர்கள் அடித்தனர். மொத்தம் 17 ரன்கள் எடுத்தனர். அடுத்த ஆடிய நேபாள அணியும் இரண்டு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் அடித்தது. அந்த அணியும் 17 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. இரண்டு சூப்பர் ஓவர்கள் சமனில் முடிவடைந்ததால் ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சிக்கே சென்றனர்.
மூன்றாவது சூப்பர் ஓவர்: இந்த நிலையில் மூன்றாவது சூப்பர் ஓவரில் மீண்டும் நேபாள அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ரோஹித் பௌடல் முதல் பந்திலே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் ருபேஷ் சிங் ரன் ஏதும் எடுக்கவில்லை. அவர் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து நேபாள அணி ரன் ஏதும் எடுக்காமல் சூப்பர் ஓவரையும் முடித்தது.
சூப்பர் ஓவர் வரலாற்றிலேயே ரன் ஏதும் எடுக்காத சர்வதேச அணி என்ற மோசமான சாதனையை நேபாள அணி பதிவு செய்தது. அடுத்து நெதர்லாந்து அணி மூன்றாவது சூப்பர் ஓவரின் முதல் பந்திலையே ஒரு சிக்சரை அடித்து இந்தப் போட்டியை வென்றது.
இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட சூப்பர் ஓவர்களை ஆடிய ஒரே அணி என்ற பெருமை இந்தியாவிடம் இருந்தது. 2023 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களை ஆடி இருந்தது. அதற்குப் பிறகு தற்போது நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மூன்று சூப்பர் ஓவர்களை ஆடி இருக்கின்றனர். அதில் நெதர்லாந்து அணி வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications