நெதர்லாந்தின் வெற்றியால் இலங்கைக்கு ஆபத்து.. நமிபியாவுக்கு அதிர்ச்சி அளித்த டச்சு படை.. முழு விவரம்
ஜீலாங் : 2022 டி20 உலககோப்பையில் நமிபியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி 2வது வெற்றியை பெற்றுள்ளது.
நெதர்லாந்தின் இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு ஆபத்து அதிகரித்துள்ளது. முதல் சுற்று குரூப் ஏவும் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
டாஸ் வென்ற நமிபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கையை தோற்கடித்த உத்வேகத்துடன் நமிபியா வீரர்கள் இருந்தனர்.

நமிபியா தடுமாற்றம்
இந்த நிலையில், நமிபியா அணியின் தொடக்க வீரர் திவான் டக் அவுட்டாகி வெளியேறினார். மைக்கேல் வான் நிதானமாக விளையாடி 20 ரன்களும், கடந்த ஆட்டத்தில் கலக்கிய ஸ்டிபன் பார்ட் 19 ரன்குளம் எடுக்க, ஜென் சிக்கோல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 63 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நமீபியா தடுமாறியது.

122 ரன்கள் இலக்கு
இதனைத் தொடர்ந்து ஜென் பிரைவிங் நிதானமாக விளையாடி48 பந்துகளை பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். கேப்டன் எராஸ்மஸ் தன் பங்கிற்கு 16 ரன்கள் சேர்க்க, நமிபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்துள்ளது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்தும் தடுமாறியது.

பரபரப்பான ஆட்டம்
தொடக்க வீரர்களான மேக்ஸ் மற்றும் விக்ரமஜித் பொறுப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 59 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். விக்ரமஜித் 39 ரன்கள் எடுக்க, மேக்ஸ் 35 ரன்கள் மட்டுமே சேர்த்தார். எனினும் டாக் குப்பர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.

இலங்கைக்கு சிக்கல்
இறுதியில் பாஸ் டீ லீட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுக்க நெதர்லாந்து அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் நெதர்லாந்து 2வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது நமிபியா அணி யுஏஇ அணியுடன் வெற்றி பெற்றாலே, ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு சென்றுவிடும். இதனால் இலங்கை அணி எஞ்சிய போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications