பெங்களூர்: சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, கர்நாடக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் உள்ள சூர்யா சிட்டியில் சுமார் ₹1,650 கோடி செலவில், 80,000 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானம் உட்பட ஒரு மெகா விளையாட்டு வளாகம் அமையவுள்ளது.
இதன் மூலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இது உருவெடுக்கும். அதே சமயம், இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத மைதானங்களில் ஒன்றான சின்னசாமி மைதானம் விரைவில் மூடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் 4, 2025 அன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது, சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த கூட்ட நெரிசலில் 11 அப்பாவி உயிர்கள் பறிபோயின. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஆணையம், வெறும் 17 ஏக்கரில் 32,000 இருக்கைகளுடன் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியம், பெரிய நிகழ்வுகளை நடத்தத் தகுதியற்றது என்று அறிக்கை அளித்தது.
அதிக மக்கள் கூடும் போட்டிகளை, போதுமான இடவசதி, பார்க்கிங் மற்றும் கூட்டத்தை நிர்வகிக்கும் வசதிகளுடன் கூடிய பெரிய மைதானங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்தது. இந்த சோகத்தின் எதிரொலியாக, கர்நாடகா உள்ளூர் டி20 தொடரான 2025 மகாராஜா டிராபி மைசூருக்கு மாற்றப்பட்டது. மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் 2026 ஐபிஎல் போட்டிகளை பெங்களூருவில் நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இனி இதுபோன்ற ஒரு துயரம் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள கர்நாடக அரசு, கர்நாடக வீட்டுவசதி வாரியத்தின் (KHB) புதிய கிரிக்கெட் மைதான திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. பெங்களூருவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு மையம் அமையவுள்ளது.

இதன் முக்கிய அம்சமாக, சர்வதேச தரத்திலான 80,000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. இந்த விளையாட்டு வளாகத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாது, மேலும் பல அம்சங்களும் இடம்பெறும்:
இந்த மைதானம் சின்னசாமி மைதானத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொம்மசந்திரா பகுதியில் அமைய உள்ளது. இந்த இடம் தமிழகத்தின் ஓசூருக்கு சற்று அருகே இருக்கிறது. அதாவது பெங்களூரின் மையத்தில் இருப்பவர்கள் வாகன நெரிசலில் இந்த மைதானத்துக்கு வர சுமார் ஒரு மணி நேரமாவது ஆகும். ஆனால், ஓசூரின் மையத்தில் இருப்பவர்கள் இந்த மைதானத்துக்கு சுமார் 20 நிமிட பயணத்தில் சென்று விடலாம்.
ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கே.எல். ராகுல் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய பெங்களூரு, பல ஆண்டுகளாக கிரிக்கெட்டின் மையமாகத் திகழ்கிறது. தற்போதுள்ள சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு மற்றும் இடநெருக்கடி போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், இந்த புதிய மைதானம் பெங்களூருவின் கிரிக்கெட் பெருமையை அடுத்த கட்டத்துக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மைதானம் குறித்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், சின்னசாமி மைதானத்தின் எதிர்காலம் குறித்த ஒருவித ஏக்கமும் சோகமும் நிலவுகிறது. அனில் கும்ப்ளேவின் 10 விக்கெட் சாதனை முதல், ஆர்சிபி-யின் திரில்லிங்கான போட்டிகள் வரை, பல கிரிக்கெட் நினைவுகளின் களஞ்சியமாக சின்னசாமி மைதானம் விளங்குகிறது.
இந்த புதிய மைதானம், 2027 ஐபிஎல் சீசன் முதல் ஆர்சிபி-யின் ஹோம் கிரவுண்டாக மாறுமா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளன. இந்த மெகா திட்டம் திட்டமிட்டபடி நடந்தால், இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் முடிவில், பெங்களூருவில் ஒரு நவீன கிரிக்கெட் மைதானம் உருவாகும்.