31 வருடங்களுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனை.. சென்னை மண்ணில் அஸ்வின் அசத்தல்
சென்னை: 31 வருடங்களுக்கு பிறகு உலக டெஸ்ட் அரங்கில் ஆல்-ரவுண்டராக அஸ்வின் ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயமாக இருந்தது. கபில்தேவ், ராபின் சிங், அகர்க்கர், இர்ஃபான் பதான், யுவராஜ் சிங் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஆல்-ரவுண்டர்களைத்தான் இந்திய அணி தனது வரலாற்றில் கண்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் அசைக்க முடியாத ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார் அஸ்வின். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவரது சாதனை தொடருகிறது. விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், ரன்களை குவிப்பதிலும் கபில் தேவுக்கு இணையாக அஸ்வின் மாறியுள்ளார்.

வரலாற்றிலேயே 7 பேர்
ஒரு டெஸ்ட் தொடரில் 250 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 25 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் வரலாற்றிலேயே 7 பேர்தான். அந்த எலைட் குரூப்பில் அஸ்வினும் தற்போது இணைந்துள்ளார். நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் இந்த சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.

கபில்தேவ்
முன்னதாக, இந்திய தரப்பில் கபில் தேவ் இச்சாதனையை செய்திருந்தார். 1979-80ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 278 ரன்கள் குவித்ததோடு, 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இரண்டாவது இந்தியர்
அதன்பிறகு இந்திய வீரர் ஒருவர் 25 விக்கெட்டுகளை எடுத்ததோடு, 250 ரன்களுக்கும் மேல் ஸ்கோர் செய்துள்ளார் என்றால் அது அஸ்வின் மட்டுமே. அஸ்வின் இதுவரை 28 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த செய்தி வெளியானபோது சென்னை டெஸ்டில் அஸ்வின் அரை சதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

31 வருடங்கள் முன்பு
இதற்கு முன்பாக, உலக அளவில் இங்கிலாந்தின் இயான் போத்தம், 250 ரன் மற்றும் 31 விக்கெட்டை வீழ்த்தியது 1985ம் வருடம்தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அது. நடுவில் 31 வருட காலத்தில் யாரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. அஸ்வின் இப்போது அதை செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, ஆஸி. வீரர்கள்
தென் ஆப்பிரிக்காவின் ட்ரேவோர் கோட்டார்ட் 1966ல் ஆஸி.க்கு எதிராக, 294 ரன்களை சேகரித்து, 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனாட், 1957ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 329 ரன்கள் குவித்ததோடு, 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எலைட் பட்டியல்
அதற்கும் முன்பாக தென் ஆப்பிரிக்காவின் ஆப்ரே பால்க்னர், இங்கிலாந்துக்கு எதிராக 1910ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 5345 ரன்கள் குவித்ததோடு 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 1894ல் ஆஸ்திரேலியாவின் ஜார்க் கிப்பென் இங்கிலாந்துக்கு எதிராக 474 ரன்கள் குவித்து, 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த எலைட் பட்டியலில் தற்போது அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications