முதல் அரை இறுதிப் போட்டி-217 ரன்களில் சுருண்டது நியூசி.
கொழும்பு: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியி்ன் முதல் அரை இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 217 ரன்களில் சுருண்டு போனது.

இலங்கையில் தனது கடைசி ஒரு நாள் போட்டியில் ஆடிய முத்தையா முரளிதரன் 2 விக்கெட்களை வீழ்த்த, மலிங்காவும், அஜந்தா மெண்டிஸும் தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர்.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதிக் கட்டம் நெருங்கி விட்டது. இன்று அரை இறுதிப் போட்டிகள் தொடங்கின. முதல் அரை இறுதிப் போட்டி கொழும்பில் நடந்தது.
இப்போட்டியில் இலங்கையும், நியூசிலாந்தும் சந்தித்தன. முதல் முறையாக உலகக் கோப்பையை தட்டிச் செல்லும் வேகத்துடன் நியூசிலாந்து களம் இறங்கியது. அதேசமயம், 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் இலங்கை களம் கண்டது.
பகலிரவுப் போட்டியான இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டேணியல் வெட்டோரி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்கத்தில் மார்டின் குப்திலும், பிரன்டன் மெக்கல்லமும் நிதானமாக ஆடி ரன் குவிப்புக்கு ஆயத்தமானார்கள். ஆனால் ஹெராத், மெக்கல்லத்தை 13 ரன்களில் ஆட்டமிழக்க வைக்கவே ஆட்டம் திசை மாறியது.
மறு முனையில் குப்தில்39 ரன்களை எடுத்தார். பின்னர் வந்தவர்களில் ஜெஸ்ஸி ரைடர் 36 ரன்களைச் சேர்த்தார்.
இன்றைய ஆட்டத்தில் ஸ்காட் ஸ்டைரிஸின் ஆட்டம்தான் சிறப்பாக இருந்தது. விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்க போராடியபடி மறுபக்கம் ரன்களையும் சேர்த்து அணியை பெரும் சரிவிலிருந்து மீட்க கடுமையாக போராடினார் ஸ்டைரிஸ்.
ஒருபக்கம் வில்லியம்ஸன் அதிரடியாக 16 பந்துகளில் 22 ரன்களைக் குவித்தார். நன்றாகப் போய்க் கொண்டிருந்த நியூசிலாந்து பின்னர் தட்டுத் தடுமாறி, இறுதியில், 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்து ஓய்ந்தனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications