பாகிஸ்தான் அணியா இது?? அரையிறுதியில் தந்த பெரும் ட்விஸ்ட்.. பதறிப்போன நியூசிலாந்து.. சவாலான இலக்கு!
சிட்னி: நியூசிலாந்து அணியுடனான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இரு அணிகளும் மோதும் இந்த அரையிறுதிப்போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடியாக ஓப்பனிங் கொடுக்க முயன்று நியூசிலாந்து ஆப்பு வைத்துக்கொண்டது.

தொடக்கமே அதிர்ச்சி
நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தின் மிகவும் ஆபத்தான வீரராக ஓப்பனர் ஃபின் ஆலன் தான் பார்க்கப்பட்டார். அதற்கேற்றார் போல முதல் பந்தே பவுண்டரி அடித்தார். ஆனால் அதே ஓவரில் ஆலனை விக்கெட் எடுத்து பழிதீர்த்தார் சாஹீன் அஃப்ரிடி. அப்போது அடங்கிய நியூசிலாந்தின் அதிரடி ஆட்டம் முடியும் வரை எழவில்லை.

பாகிஸ்தான் தந்த அதிர்ச்சி
மற்றொரு ஓப்பனிங் வீரர் டெவோன் கான்வே 21 ரன்களும், அதன்பின்னர் வந்த அதிரடி வீரர் க்ளென் பிலிப்ஸ் 6 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். வழக்கமாக ஃபீல்டிங்கில் சொதப்பும் பாகிஸ்தான், இன்று திடீரென அட்டகாசமாக செயல்பட்டது. இதனால் தான் 49 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.

கேப்டனின் இன்னிங்ஸ்
இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் - டேர்லி மிட்செல் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சீரான வேகத்தில் இவர்கள் ரன் உயர்த்தியதால் 49/3 என இருந்த ஸ்கோர் 4வது விக்கெட்டிற்கு 117 ரன்களுக்கு சென்றது. நீண்ட நேரத்திற்கு பின்பு அதிரடி மோடிற்கு மாறிய கேப்டன் வில்லியம்சன் 46 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

கடினமான இலக்கு
எனினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேர்லி மிட்செல் கடைசி வரை நின்று நியூசிலாந்தை காப்பாற்றினார். 35 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 53 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஜேம்ஸ் நீஷம் 16 ரன்களை அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்களை குவித்தது.


Click it and Unblock the Notifications