இலங்கையை நசுக்கிய நியூசிலாந்து.. போல்ட் வேகத்தில் அடுத்தடுத்து சரிந்த பேட்ஸ்மேன்கள்.. அபார வெற்றி
சிட்னி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை தக்காளியாக நசுக்கி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இரு அணிகளும் மோதிய குரூப் ஏ பிரிவுக்கான போட்டி இன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஏ பிரிவில் அனைத்து அணிகளும் சம அளவிலான புள்ளிகளை பெற்றிருந்ததால் இந்த போட்டி முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
அதன்படி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுத்தது என்றே கூறலாம்.

திணறிய நியூசிலாந்து
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் ஒரே ஒரு ரன்னை மட்டும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன்பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன், நிதானமாக ஆடிய போதும் வெறும் 8 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் 15 ரன்களுக்கெல்லாம் 3 விக்கெட்களை இழந்து திணறியது.

மிடில் ஆர்டர் பேட்டிங்
அப்போது களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் தனி நபராக நியூசிலாந்து அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்தார். தூண் போல நின்று ஆடிய அவருக்கு எந்த ஒரு வீரரும் சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. ஒருபுறம் விக்கெட்கள் சொற்ப ரன்களுக்கு சரிய மறுபுறம் அதிரடியை தொடர்ந்துக்கொண்டே இருந்தார்.

ஒற்றை ஆள் போராட்டம்
64 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. இந்த மைதானத்தில் 167 என்பது கடினமான இலக்கு தான். எனினும் இலங்கை அணி பவுலிங்கை போலவே பேட்டிங்கிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிச்சம்.

சரிந்த இலங்கை
இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா டக் அவுட்டும், குசல் மெண்டீஸ் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த தனஞ்செயா டி சில்வா (0), சாரித் அசலங்கா (4) என ஏமாற்றினர். இதனால் அந்த அணி 24 ரன்களுக்குள் இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து மோசமாக தடுமாறியது.

ஆல் அவுட்
பின்னர் ஜோடி சேர்ந்த பனுக்கா ராஜபக்ச (34) - தசுன் ஷனகா (35) என நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அவர்களாலும் நீண்ட நேரம் நீடித்து நிற்க முடியவில்லை. இதனால் 19.2 ஓவர்களிலேயே இலங்கை அணி 102 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications