நேப்பியர் : நியூசிலாந்து அணியை கத்துக்குட்டி அணி போல ஆட வைத்து, வங்கதேசம் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. எனினும், அந்த இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 98 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து கிரிக்கெட் உலகில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது வங்கதேசம். மேலும், நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை முதல் முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டி நடந்த பிட்ச்சை சரியாக பயன்படுத்திக் கொண்ட வங்கதேச பந்துவீச்சாளர்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசினர். அதை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்து சென்றனர்.
வில் யங் 26, டாம் லாதம் 21 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் வீரர்கள் எடுத்த அதிகபட்ச தனிநபர் ரன்கள். 31.4 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த நியூசிலாந்து அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியின் தன்சிம் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், சவும்யா சர்க்கார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். முஸ்தாபிசூர் ரஹ்மான் 1 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து வங்கதேசம் பேட்டிங் செய்த போது எப்படியும் வங்கதேச அணியும், நியூசிலாந்து போலவே விக்கெட்களை இழக்கும் என எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சவும்யா சர்க்கார் 4 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அனாமுல் ஹக் 33 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். கேப்டன் நஜ்முல் ஹசன் ஷான்டோ கடைசி வரை நின்று 51 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
வங்கதேச அணி 15.1 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக தங்களின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்தது. மூத்த வீரர்கள் இல்லாமலே வங்கதேச அணி சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடரை 2 - 1 என வங்கதேச அணி இழந்து இருக்கும் நிலையில், அடுத்து டி20 தொடரை கைப்பற்ற அந்த அணி தீவிரமாக செயல்பட உள்ளதாக கேப்டன் நஜ்முல் சான்டோ தெரிவித்து இருக்கிறார்.