NZ vs SA : கத்துக்குட்டி டீம்னு கூட பார்க்காம.. செஞ்சுரி மழை.. பிரம்மாண்ட வெற்றி பெற்ற நியூசிலாந்து
வெல்லிங்டன் : முன்னணி வீரர்கள் யாரும் இடம் பெறாத கத்துக்குட்டி தென்னாப்பிரிக்க அணியை 281 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது நியூசிலாந்து அணி.
தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ டி20 தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தென்னாப்பிரிக்க முன்னணி வீரர்களும் அந்த தொடரில் பங்கேற்க சென்று விட்டனர். அதை அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பே உறுதி செய்தது. மேலும், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு இரண்டு வீரர்களை தவிர முற்றிலும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி இராத புதுமுக வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 118 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 240 ரன்களும் குவித்தனர். அடுத்து ஆடிய அனுபவம் இல்லாத தென்னாப்பிரிக்க வீரர்கள் கொண்ட அணி 162 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அப்போதே ஃபாலோ-ஆன் கொடுத்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்து இருந்தால் நியூசிலாந்து வெற்றி பெற்று இருக்கும்.
ஆனால், நியூசிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை ஆடியது. இரண்டாம் இன்னிங்ஸிலும் கேன் வில்லியம்சன் சதம் அடித்தார். அவர் 109 ரன்கள் சேர்க்க நியூசிலாந்து அணி 179 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து டிக்ளர் செய்தது.
கத்துக்குட்டி வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு 529 ரன்கள் என்ற எட்டவே முடியாத வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது நியூசிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் ஒரளவு போராடிய தென்னாப்பிரிக்கா 247 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து இருந்தாலும், முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவே அவரது முதல் டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications