மும்பை:நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் பெரும் அளவு மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்றது.
இதனை அடுத்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்காக களம் இறங்கியது.

எனினும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜெமி ஸ்மித் ஐந்து ரன்களிலும், ஜோ ரூட் 2 ரன்களிலும் ஹாரி புரூக் 6 ரன்களிலும், ஜாக்கப் பொத்தேல் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.
இதையடுத்து நடு வரிசையில் ஜாஸ் பட்லர் 38 ரன்களும், ஜெமி ஓவர்டன் 68 ரன்களும் பிரைடன் கர்ஸ் 36 ரன்களும் எடுக்க அந்த அணி 40 புள்ளி இரண்டு ஓவரில் 222 ரன்கள் என்ற கௌரவ இலக்கை எட்டியது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் பிளாயிர் டிக்னர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் கான்வே 34 ரன்களில் ஆட்டம் இழக்க, ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள் எடுத்தார். வில் யங் 1 ரன்னில் வெளியேறினார். எனினும் டேரல் மிட்செல் பொறுப்புடன் விளையாடி 44 ரன்கள் சேர்த்தார்.
ஒரு கட்டத்தில் நடுவரிசை வீரர்கள் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் வெற்றிக்கு தேவையான இலக்கு மிகவும் குறைவு என்பதால் நியூசிலாந்து அணியின் கீழ் வரிசை வீரர்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் 44.4 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது.