42 ரன்களில் 7 விக்கெட்டுகள்.. சொந்த காசில் சூனியம்னா இதுதான்.. டாப்புக்கு சென்ற நியூசிலாந்து!
சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஷாகிதி பவுலிங்கை தேர்வு செய்தார். ஆஃப்கானிஸ்தான அணி பந்துவீச்சில் வலிமையாக இருக்கும் சூழலில், சேஸிங்கை தேர்வு செய்தது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆனால் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் மோசமான ஃபீல்டிங் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்தது. கேப்டன் லேதம் 68 ரன்களும், பிலிப்ஸ் 71 ரன்களும் சேர்த்து அசத்தினர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நவீன் உல் ஹக் மற்றும் அஸ்மத்துல்லா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணி 298 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. ஆனால் 6வது ஓவரிலேயே அதிரடி வீரர் குர்பாஸ் 11 ரன்களிலும், ஜத்ரான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த கேப்டன் ஷாகிதி 8 ரன்களில் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஃப்கானிஸ்தான் அணி தடுமாறியது. தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா - ஒமர்சாய் சிறிது நேரம் போராடினர்.
ஆனால் ஒமர்சாய் 27 ரன்களிலும், ரஹ்மத் ஷா 62 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஃப்கானிஸ்தான். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நபி 7 ரன்களிலும், ரஷீத் கான் 8 ரன்களிலும், முஜீப் உர் ரஹ்மான் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசியில் வந்த நவீன் உல் ஹக் மற்றும் ஃபரூக்கி ஆகியோர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்ததோடு, 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணி சேஸிங்கை தேர்வு செய்ததும், ஃபீல்டிங்கில் கேட்ச்களை கோட்டவிட்டதுமே காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications