மான்செஸ்டர் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹெண்டர்ட் தொடரில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக களம் இறங்கிய நிக்கோலஸ் பூரான் 8 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார்.அது மட்டுமல்லாமல் 113 மீட்டர் தூரம் 6 அடித்து ரசிகர்களுக்கு அவர் விருந்தளித்தார்.
ஒரு இன்னிங்ஸில் தலா நூறு பந்துகள் என்ற புதிய வடிவத்தில் இங்கிலாந்தில் தி 100 என்ற தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கும் நார்த்தர்ன் சூப்பர் சார்ஜஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது.

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மான்செஸ்டர் அணியில் பில் சால்ட் அபாரமாக விளையாடி 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இது தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் மான்செஸ்டர் அணி 100 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தது. இதில் சிஎஸ்கே வீரர் மிட்செல் சான்ட்நர் 20 பந்துகளை வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி களமிறங்கி ஒரு கட்டத்தில் அந்த அணி தடுமாறியது. அப்போது களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மான்செஸ்டர் அணியின் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார்.
33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 66 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
குறிப்பாக ஆட்டத்தின் 74 வது பந்தில் ஸ்கார்ட் குரி வீசிய பந்தை நிக்கோலஸ் பூரான் அடித்தார். அது மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது. இந்த சிக்சர் 113 மீட்டர் தூரம் சென்றது.
இந்த போட்டியில் மூன்று பந்துகள் எஞ்சிய நிலையில் நார்த்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. சூப்பர் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியிலிருந்து அவர் பாதியில் சென்றார்.