IND vs AUS: மாபெரும் வரலாறு.. 21 வயதில் சதம்.. சச்சினின் சாதனைப் பட்டியலில் இணைந்த நிதிஷ் குமார்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா மண்ணில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. மெல்போர்னில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்கி 171 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார்.
21 வயதில் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனைப் பட்டியலில் இணைந்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. இளம் வயதில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (18 ஆண்டு 256 நாட்கள்) 1992 சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ரிஷப் பண்ட் (21 ஆண்டு 92 நாட்கள்) 2019ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி. 21 ஆண்டு 216 நாட்களில் சதம் அடித்து இந்த சாதனையை படைத்து இருக்கிறார்.
மேலும், ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் வரிசையில் இறங்கி அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டில் அனில் கும்ப்ளே அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் எடுத்து இருந்ததே எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழ் உள்ள வரிசைகளில் இறங்கிய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.
அந்த சாதனையை நிதிஷ் குமார் ரெட்டி முறியடித்து இருக்கிறார். அவர் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்களிலேயே அதிக ஸ்கோர் எடுத்த வீரராகவும் இருந்தார். மேலும், இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து ஃபாலோ ஆனை தவிர்க்க போராடி வந்த நிலையில்
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய இந்திய அணி 221 ரன்களுக்கு ஏழு விக்கெட்களை இழந்தது. அதன் பின் ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் 127 ரன்களுக்கு கூட்டணி அமைத்து இந்திய அணியை பெரும் சரிவிலிருந்து காப்பாற்றினர்.
மேலும், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே இறங்கி சதம் அடித்த இளம் வீரர்கள் பட்டியலிலும் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். இதற்கு முன் அபுல் ஹாசன் 20 ஆண்டு, 108 நாட்களிலும், அஜய் ராத்ரா 20 வயது 150 நாட்களிலும் சதம் அடித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications