டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் 7வது தொடரில் பங்கேற்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின்போது இந்த இரு அணிகளும்தான் ஸ்பாட் பிக்ஸிங், மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கின. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சிக்கி கைதானார்கள்.
அதேபோல சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனும் பெருமளவில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகர் வின்டு உள்ளிட்டோர் போலீஸில் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவும் சூதாட்டடத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு கிளம்பியது.
இந்த விவகாரத்தில் இரு அணிகள் மீதும் கடுமையான புகார்கள் உள்ள காரணத்தால் அவர்களை 7வது ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று நேற்று உச்சநீதிமன்றம் தனது பரிந்துரையில் கூறியிருந்தது.
ஆனால் அப்படிச் செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றத்திடம் கிரிக்கெட் வாரியம் தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இரு அணிகளுக்கும் தடை இலலை என்று அறிவித்தது. மேலும், 7வது ஐபிஎல் தொடருக்கும் தடை விதிக்கப்படாது என்றும், இந்தத் தொடரில் புதிய வீரர்கள் சேர்க்கப்படுவதற்கும் ஆட்சேபனை கிடையாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.