யப்பா சாமி! திட்டு வாங்குனது போதும்.. இனி மாட்டுக் கறியே வேணாம்.. பிசிசிஐ புது முடிவு
மும்பை : இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடர் முடிந்த உடன், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு மாட்டுக் கறி வழங்கக்கூடாது உள்ளிட்ட சில உணவு தொடர்பான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என பிசிசிஐ கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் உணவுப் பட்டியலில் மாட்டுக் கறி இடம் பெற்று இருந்தது. அது இந்திய ரசிகர்களால் விமர்சனத்துக்கு உள்ளாகியது.

ஒப்பந்தம் போடும் நிலை
பிசிசிஐ சார்பாக இரண்டு அதிகாரிகள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அங்கே நடக்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை அவர்கள் கவனித்து வருகிறார்கள். அங்கே அவர்கள் இந்திய அணிக்கு மாட்டுக் கறி வழங்கக்கூடாது என்பதை ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும் என பிசிசிஐக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மாட்டுக் கறி பிரச்சனை
இங்கிலாந்து தொடரின் போது இந்திய வீரர்களின் உணவுப் பட்டியலை ட்விட்டர் பதிவில் வெளியிட்டது பிசிசிஐ. அதில் மாட்டுக் கறியும் இடம் பெற்று இருந்தது. அது ரசிகர்கள் இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. இந்திய அணியில் சைவ உணவு மட்டுமே உட்கொள்ளும் வீரர்களும் உள்ளனர்.

அவசியம் ஏற்பட்டது ஏன்?
ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து பிசிசிஐ இந்த கோரிக்கையை எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கடந்த முறை இந்திய வீரர்கள் தங்களுக்கு ஏற்ற உணவு கிடைக்காமல் ஆஸ்திரேலியாவில் தடுமாறி உள்ளனர்.

சைவ உணவு கிடைக்காமல் அவதி
இஷாந்த் சர்மா உள்ளிட்ட சில வீரர்கள் சுத்த சைவ உணவு மட்டுமே உட்கொள்வர். அவர்கள் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சைவ உணவுகள் கிடைக்காமல் அவதிப் பட்டனர். அவர்கள் சீஸ் பர்கர் போன்ற உணவுகளை வைத்து சமாளித்து வந்தனர். மீண்டும், அது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்கவும், இந்தியாவில் மாட்டுக் கறிக்கு இருக்கும் எதிர்ப்பை சமாளிக்கவும், பிசிசிஐ தற்போது இந்த விவாகரத்துக்கு ஒப்பந்தம் போடும் அளவுக்கு சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications