கோலியின் வாழ்க்கையில் மிக மோசமான காலக்கட்டம்.. ஏன்?
சென்னை: கடந்த 31 இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நிலைமை பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுக்க, இந்தியா இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். ரோஹித் 6 ரன்களிலும், கில் 29 ரன்களிலும், ரஹானே 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதில், சோகம் என்னவெனில், ஆஃப் ஸ்பின்னரான டோமினிக் பெஸ் ஓவரில், கட்டம் கட்டித் தூக்கப்பட்டார் விராட் கோலி. ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வெளியே வந்த பந்தை அவர் டிஃபன்ட் செய்ய முயல, அது அவரது பேட் ஹேண்டிலில் பட்டு எட்ஜ் ஆகி, பக்கவாக நிக்கவைக்கப்பட்ட ஆலி போப் கைகளில் தஞ்சமடைந்தது.

கோலி இறங்குமுகம்
கடந்த 2020 முதல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 23 போட்டிகளில் விளையாடியுள்ளார் கோலி. இதில், அவர் அடித்த ரன்கள் 853 மட்டுமே. ஆவரேஜ் 35.54. இதில் 7 அரைசதங்கள் அடங்கும். ஆனால், ஒரு சதம் கூட அவர் அடிக்கவில்லை.

14 முறை அவுட்
இந்த காலக்கட்டத்தில் 14 முறை 30 ரன்களுக்கும் குறைவாக அவுட்டாகியுள்ளார். இது கோலி போன்ற ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனின் மிக மோசமான சாதனையாகும். 2020 முதல் இதுபோன்று மோசமான ஃபார்மில் குறைந்தபட்சம் 500 ரன்கள் அடித்த 34 பேட்ஸ்மேன்களில், கோலி 30வது இடத்தில் உள்ளார்.

ரசிகர்கள் ஷாக்
31 இன்னிங்ஸ் வரை சதம் அடிக்காமல் இருப்பது கோலியின் கிரிக்கெட் கரியரில் மிக நீண்ட மோசமான காலக்கட்டமாகும். இதற்கு முன்பாக 2014 பிப்ரவரி முதல் 2014 அக்டோபர் வரை 25 இன்னிங்ஸிற்கு கோலி சதமடிக்காமல் இருந்திருக்கிறார். அதற்கு பிறகு இப்போது தான் நெருக்கடியான காலத்தை கோலி அனுபவித்து வருகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தடுமாறி வரும் சூழலில், கேப்டன் கோலி வலிமையாக மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரை போன்ற ஒரு ஆளுமைமிக்க சர்வதேச சாதனையாளர்கள் விரைவில் கடினமான காலங்களில் இருந்து மீண்டு வருவார்கள் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications