ஹெட்டிங்லீ: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அடில் ரசித்தின், தோனி டைப் ரன் ரவுட் தான் கிரிக்கெட் உலகின் தற்போதைய வைரலாக மாறி இருக்கிறது.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒரு டி20, 5 ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டி20 போட்டியில் தோற்றதோடு, அடுத்து நடந்த ஒருநாள் தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. முதல் போட்டி மழை காரணமாக நடக்க வில்லை.

ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 5வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 351 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அஜாம் 80, சர்பரஸ் அகமது 97 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் இருவரும் விக்கெட்டை பறிகொடுத்ததால் அந்த வெற்றி கை நழுவியது.
இந்த போட்டியில் அடில் ரசித் 27வது ஓவரின் முதல் பந்தை வீசினார். சர்ஃபரஸ் அகமது பந்தை ஷார்ட் லெக் பகுதியில் மெதுவாக அடித்தார். ஆனால் எதிர் திசையில் இருந்த பாபர் ஆசம் தேவையில்லாமல் ஒரு ரன் எடுக்க முயன்ற போது பந்தை கீப்பர் பட்லர் பிடித்து அடில் ரசித்திடம் வீசினார்.
அதை பிடித்து மறு கணமே, நொடியும் தாமதிக்காமல் தோனியை போன்று ஸ்டெம்பை பார்க்காமல் பந்தை எறிந்து ரன் அவுட் ஆக்கினார் அடில் ரசித். ஸ்டெம்பை பார்க்காமல் பந்தை திருப்பிய அடில் ரசித்தின் வேகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.