1000 முறை கூட ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுங்கள்.. நான் அல்லாஹு அக்பர் என்று சொல்வேன்.. முகமது ஷமி கருத்து!
மும்பை : ஜெய் ஸ்ரீ ராம், அல்லாஹு அக்பர் என்று கோஷமிடுவதால் எந்த தவறும் கிடையாது என்று இந்திய அணி வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகக்கோப்பை தொடரின் போதே காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி.

இந்த காயம் காரணமாக இதுவரை முகமது ஷமி கிரிக்கெட் விளையாட முடியாமல் தவித்து வருகிறார். இதனிடையே உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது முகமது ஷமி மைதானத்தில் நமாஸ் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் பலரும் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி கோஷம் எழுப்பினர்.
கடந்த சில ஆண்டுகளாக முகமது ஷமி மீது தேவையற்ற வன்மத்தை குறிப்பிட்ட சில ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் போதே முகமது ஷமி மீது இப்படியான விமர்சனங்கள் அதிகமாகின. ஆனாலும் முகமது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் விராட் கோலி இருவரும் நின்றனர்.
இந்த விவகாரம் குறித்து முகமது ஷமி பேசுகையில், எல்லா மதங்களிலும் மாற்று மதத்தினரை விரும்பாத சில பேர் இருப்பார்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது. ஒருமுறை அல்ல, 1000 முறை கூட ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லலாம்.
அதேபோல் எனக்கு அல்லாகூ அக்பர் என்று சொல்ல வேண்டுமென்று தோன்றினால், நானும் ஆயிரம் முறை அல்லாகூ அக்பர் என்று கூறுவேன். இதனால் என்ன வேறுபாடு வந்துவிடப் போகிறது என்று தெரிவித்துள்ளார். ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் அல்லாகூ அக்பர் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று முகமது ஷமி பேசியிருப்பது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications