கோச் பதவி கிடைக்காமல் போக கங்குலியின் கோபம் காரணமா.. என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை தேர்ந்தெடுக்க கூடாது என்பதில் வழிகாட்டும் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உறுதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த நேர் காணலின்போது அசத்தலாக பிரசன்டேசன் கொடுத்த முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவிக்கான போட்டியில் இருந்த மாஜி கேப்டனும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியால் அந்த பதவிக்கு வர முடியவில்லை.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ரவி சாஸ்திரி கூறுகையில், அது முடிந்துபோன சம்பவம். வேறு விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன் என்று கூறினார்.

புறக்கணிப்பு
ரவி சாஸ்திரி நேர்காணலில் பங்கேற்றபோது, நேர்காணல் குழுவில் இடம்பெற்றிருந்த சவுரவ் கங்குலி பங்கேற்கவில்லை. சாஸ்திரி மீதான கோபம்தான் கங்குலியை புறக்கணிப்பு செய்ய தூண்டியதாக கூறப்படுகிறது.

கோபம்
ரவி சாஸ்திரி டிவி வர்ணனைகளின்போது, கங்குலி குறித்து புகழ்ச்சியாக எதையும் தெரிவித்ததில்லை என்ற வருத்தம் கங்குலிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

அணிக்கான உழைப்பு
சோர்ந்து கிடந்த இந்திய அணியை தனது ஆக்ரோஷ ஸ்டைல் கேப்டன்ஷிப் மூலம் மறு உருவாக்கம் செய்ததை பலரும் பாராட்டும்போதும், ரவி சாஸ்திரி தனக்கான அங்கீகாரத்தை சரியாக தரவில்லை என்ற கோபம் கங்குலிக்கு இருந்ததாம். இதுதான் சாஸ்திரி மீதான கங்குலி கோபத்திற்கு காரணம் என தெரிகிறது.

ஒரே டயர்ட்டா இருக்கு
கங்குலியின் கோபத்தால்தான் உங்களுக்கு பதவி கிடைக்கவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, கங்குலியால் ஒன்றும் ஆகவில்லை. நான் வெளிநாட்டில் இருந்து இப்போதுதான் தாயகம் திரும்பியுள்ளேன். போதிய தூக்கம் இல்லை. இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications