Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் உலகில் பெரும் அதிர்ச்சி.. தான் உருவாக்கிய டென்னிஸ் அமைப்பிலிருந்தே வெளியேறினார் ஜோகோவிச்

பெல்கிரேட்: டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனும், 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜாம்பவானுமான நோவக் ஜோகோவிச், வீரர்களின் உரிமைகளுக்காகத் தானே முன்னின்று தொடங்கிய 'தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்திலிருந்து' (PTPA - Professional Tennis Players Association) அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் 2026 தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜோகோவிச்சின் இந்த முடிவு டென்னிஸ் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, டென்னிஸ் வீரர்களுக்கு ஒரு சுதந்திரமான குரல் வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பைத் தொடங்கிய ஜோகோவிச், தற்போது அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்து வெளியேறியுள்ளார்.

Novak Djokovic Quits PTPA Tennis Legend Cuts Ties with Player Body He Co-Founded

விலகலுக்கு என்ன காரணம்?

ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக வலைதளத்தில் ஜோகோவிச் வெளியிட்ட அறிக்கையில் தனது விலகலுக்கான காரணங்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். "நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, பிடிபிஏ அமைப்பிலிருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளேன். அமைப்பின் நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் எனது குரலும், பிம்பமும் பயன்படுத்தப்படும் விதம் குறித்து எனக்குத் தொடர்ந்து கவலைகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய திசைப்பயணம், எனது கொள்கைகளுடனும் நோக்கங்களுடனும் ஒத்துப்போகவில்லை என்பது தெளிவாகிவிட்டது" என்று ஜோகோவிச் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி வரும் காலங்களில் தனது முழுக் கவனமும் தனது குடும்பம், தனது டென்னிஸ் ஆட்டம் மற்றும் தனது கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையிலான செயல்பாடுகளில் மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிடிபிஏ (PTPA) - ஒரு பின்னணி

2019-20 காலகட்டத்தில், டென்னிஸ் விளையாட்டை நிர்வகிக்கும் ஏடிபி (ATP) மற்றும் டபிள்யூடிஏ (WTA) போன்ற அமைப்புகளுக்கு எதிராக, வீரர்களின் நலனைப் பாதுகாக்க ஜோகோவிச்சும், கனடா வீரர் வாசெக் போஸ்பிசிலும் (Vasek Pospisil) இணைந்து இந்த பிடிபிஏ அமைப்பைத் தொடங்கினர். டென்னிஸ் வீரர்கள் சங்கத்தில் (ATP Player Council) தலைவராக இருந்த ஜோகோவிச், அங்கிருந்து விலகி, வீரர்களுக்காகத் தனி அமைப்பு வேண்டும் என்று இதனை உருவாக்கினார்.

குறிப்பாக, தரவரிசையில் பின்தங்கியிருக்கும் வீரர்களின் வருமானம், போட்டி அட்டவணைகள் மற்றும் அவர்களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், பிடிபிஏ அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் எழுந்தன.

கடந்த மார்ச் 2025-ல், இந்த அமைப்பு ஏடிபி, டபிள்யூடிஏ மற்றும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF) ஆகியவற்றுக்கு எதிராக ஒரு பெரிய வழக்கைத் தொடர்ந்தது. "டென்னிஸ் நிர்வாக அமைப்புகள் போட்டி விதிகளுக்கு முரணாகச் செயல்படுகின்றன; வீரர்களின் உழைப்புச் சுரண்டப்படுகிறது" என்பது அந்த வழக்கின் சாராம்சம் ஆகும். இப்படி நிர்வாக அமைப்புகளுடன் ஒரு பெரிய சட்டப் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், அந்த அமைப்பின் முகமாக இருந்த ஜோகோவிச்சே வெளியேறியிருப்பது பிடிபிஏ-வுக்குப் விழுந்த பலத்த அடியாகும்.

எதிர்காலம் கேள்விக்குறி?

ஜோகோவிச்சின் இந்தத் திடீர் விலகல், பிடிபிஏ அமைப்பின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜோகோவிச் போன்ற ஒரு ஆளுமையின் ஆதரவு இல்லாமல், டென்னிஸ் நிர்வாக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோ அல்லது சட்டப் போராட்டத்தைத் தொடர்வதோ அந்த அமைப்புக்கு இனி எளிதான காரியமாக இருக்காது என்று விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Monday, January 5, 2026, 9:50 [IST]
Other articles published on Jan 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+