டெல்லி: டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் செர்பிய நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச், வயது ஒரு தடையல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கிரீஸில் நடைபெற்ற ஹெலனிக் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப் போட்டியில், இத்தாலியின் இளம் வீரர் லொரென்சோ முசெட்டியை வீழ்த்தி, தனது 101-வது ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஜோகோவிச்சும், முசெட்டியும் கடுமையாக மோதினர். மூன்று செட்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடினார்.

போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் முசெட்டியிடம் இழந்த ஜோகோவிச், பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி பட்டத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம், தனது 101-வது ஏடிபி பட்டத்தை வென்றதுடன், ஏடிபி டூர் பட்டத்தை வென்ற மிகவும் வயதான வீரர் என்ற புதிய சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.
இந்த சாதனை வெற்றிக்குப் பிறகு, தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜோகோவிச், இந்த வெற்றியை கிரேக்க மக்களுக்குச் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
"இந்த வெற்றியை அற்புதமான கிரேக்க மக்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் எனக்கு ஆதரவளித்தீர்கள், டென்னிஸுக்கு ஆதரவளித்தீர்கள், என்னை உங்கள் வீட்டில் ஒருவராக உணர வைத்தீர்கள். இந்த அழகான புதிய தொடரைச் சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். லொரென்சோ, இது ஒரு காவியப் போர். உனது நம்பமுடியாத ஆட்டத்திற்கும் இந்தத் தொடருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து முன்னேறு, உனது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. முன்னேறிச் செல்வோம்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
போட்டிக்குப் பிறகு ரசிகர்களிடம் பேசிய ஜோகோவிச், இந்த ஆட்டம் எவ்வளவு கடினமாக இருந்தது என்பது குறித்தும், தனது எதிராளியின் ஆட்டம் குறித்தும் பாராட்டினார். "இது ஒரு நம்பமுடியாத போர். சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. உடல் ரீதியாக மிகவும் சோர்வடையச் செய்த, கடும் சவாலான போட்டி இது. லொரென்சோ உண்மையில் மிகச் சிறப்பாக விளையாடினார்," என்று ஜோகோவிச் குறிப்பிட்டார்.
"இந்த ஆட்டம் யாருக்கு வேண்டுமானாலும் வெற்றியைத் தந்திருக்கலாம். எனவே, அவரது அற்புதமான ஆட்டத்திற்கு எனது வாழ்த்துகள். இந்தக் கடினமான போட்டியில் வெற்றி பெற்றதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றும் அவர் கூறினார்.