இது லிஸ்ட்லையே இல்லப்பா.. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசி. விக்கெட் கீப்பர்.. ஆடிப்போன ஆஸ்திரேலியா!
வெலிங்டன் : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி கேமரூன் க்ரீனின் அபார சதம் காரணமாக 383 ரன்களை விளாசியது. கடைசி வரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் 174 ரன்களை விளாசி அசத்தினார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 71 ரன்கள் சேர்த்தார். அதேபோல் ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 204 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் வந்த ஆஸ்திரேலியா அணிக்கு 2வது இன்னிங்ஸ் அதிர்ச்சியுடன் தொடங்கியது. தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட்டாக, இன்னொரு பக்கம் லபுஷேன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. தொடர்ந்து 3வது நாளில் பிட்ச் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக மாறியது.
இதனையறிந்த நியூசிலாந்து அணி கிளென் பிலிப்ஸை வைத்து அட்டாக் செய்தது. இவரது சுழலில் சிக்கி கவாஜா 28 ரன்களிலும், ஹெட் 29 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் டக் அவுட்டாகியும், கேரி 3 ரன்களில், க்ரீன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விக்கெட் கீப்பரான கிளென் பிலிப்ஸ் தற்போது பார்ட் டைம் ஸ்பின்னராக நியூசிலாந்து அணிக்கு அசத்தலான பங்களிப்பை வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 369 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications