NZ vs Ban - கோல்டன் வாய்ப்பை வீணடித்த வங்கதேசம்.. 2வது டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி.. தொடரும் சமன்
மிர்பூர் : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவியதன் மூலம் தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை அடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர் மகமதுல் ஹசன் 14 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 8 ரன்களிலும் கேப்டன் நஜ்முல் ஹுசைன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக முஸ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுக்க வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடுகிறது.
இதில் டாம் லத்தம், கான்வே, வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் போன்ற முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 46 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து களத்திற்கு வந்த கிளான் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி 87 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஒன்பது பவுண்டர்களும் அடங்கும்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 8 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் மட்டும் அபாரமாக நின்று 59 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணியில் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்களில் சுருண்டது.
இதனை அடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் நியூசிலாந்து அணி, தங்களுடைய கடைசி இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதிலும் கான்வே இரண்டு ரன்களிலும், கேன் வில்லியம்சன் 11 ரன்களிலும் ஹேன்றி நிக்கோலஸ் மூன்று ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க நியூசிலாந்து அணி 51 ரன்களை சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் வெற்றி பெறப்போவது யார் என்று கடும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
எனினும் இரண்டாவது இன்னிங்ஸிலும் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஜோடி இணைந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனில் முடிந்தது.


Click it and Unblock the Notifications