ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வெறும் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி படுமோசமான சரிவைச் சந்தித்த நிலையில், கேப்டன் ஹாரி புரூக் தனி ஒருவராக நின்று, ஒரு நம்பமுடியாத சதத்தை விளாசி அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டார். அவரது ஆக்ரோஷமான ஆட்டம், இங்கிலாந்து அணியை பெரும் அவமானத்தில் இருந்து மீட்டு, கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது.
பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் படுமோசமாக தொடங்கியது. ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அணி வெறும் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ஜோஸ் பட்லர் மற்றும் சாம் கரண் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, மிக மோசமான தோல்வியை நோக்கிச் சென்றது.

இந்த நெருக்கடியான சூழலில்தான், கேப்டன் ஹாரி புரூக் களத்தில் தனி ஒருவனாக கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். நிதானத்தையும், ஆக்ரோஷத்தையும் சரிசமமாகக் கலந்து, அவர் ஆடிய ஆட்டம் ஒரு மாஸ்டர் கிளாஸ் போல அமைந்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொண்டு, அவர் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெறும் 82 பந்துகளில் தனது சதத்தை எட்டிய அவர், மொத்தம் 101 பந்துகளில் 135 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த இன்னிங்ஸில் 9 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் அடங்கும். குறிப்பாக, ஜேக்கப் டஃபியின் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களைப் பிரமிக்க வைத்தார்.
கடைசி இரண்டு விக்கெட்டுகளுக்கு மட்டும் அவர் 80 ரன்கள் சேர்த்தார். ஜேமி ஓவர்டன் 46 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரை தவிர, இங்கிலாந்து அணியில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 6 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு படுமோசமான ஆட்டத்தை ஆடியது இங்கிலாந்து அணி.
நியூசிலாந்து தரப்பில், அறிமுக பந்துவீச்சாளர் ஜக்கரி ஃபோல்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், அனுபவ வீரர் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஹாரி புரூக்கின் இந்த அபாரமான சதத்தால், இங்கிலாந்து அணி 35.2 ஓவர்களில் 223 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் புரூக்கின் இரண்டாவது சதமாகும், மேலும் இதுவே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ஆனாலும், 224 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து எளிதாக எட்டியது. அந்த அணியின் டாரில் மிட்செல் (78*), மைக்கேல் பிரேஸ்வெல் (51) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், நியூசிலாந்து அணி 36.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.