
டி20 போட்டி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணி 2 - 1 என முன்னிலையில் இருந்தது.

சராசரி ஆட்டம்
நான்காவது போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற கட்டாயத்தில் ஆடியது இங்கிலாந்து அணி. முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு பான்டன், பேர்ஸ்டோ சராசரி துவக்கம் அளித்தனர்.

எட்டு ஓவர்களில் 61
பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பான்டன் 31 ரன்கள் எடுத்தார். முதல் எட்டு ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து இருந்தது. 2 விக்கெட்கள் வீழ்ந்த பின் ஜோடி சேர்ந்தனர் தாவித் மலன் மற்றும் கேப்டன் இயான் மார்கன்.

சாதனை கூட்டணி
இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 182 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கியது. இவர்களின் அதிரடியால் கடைசி 12 ஓவர்களில் இங்கிலாந்து அணி 180 ரன்கள் குவித்தது.

241 ரன்கள் குவிப்பு
8 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் குவித்து மிரட்டியது. இதுவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

விரைவான சதம்
தாவித் மலன் 51 பந்துகளில் 103 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 48 பந்துகளில் சதம் அடித்த மலன் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக மிக விரைவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார். முன்னதாக அலெக்ஸ் ஹேல்ஸ் 60 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

விரைவான அரைசதம்
இயான் மார்கன் 41 பந்துகளில் 91 ரன்கள் குவித்து கடைசி இரு பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் 21 பந்துகளில் அரைசதம் கடந்து இங்கிலாந்து அணிக்காக மிக விரைவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்தார். முன்னதாக ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

உலக அளவில் சாதனை
182 ரன்கள் குவித்த மலன் - மார்கன் ஜோடி, உலக அளவில் டி20 போட்டிகளில் நான்காவது அதிகபட்ச கூட்டணி ரன்களை பதிவு செய்தது. இங்கிலாந்து அணிக்காக எந்த விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச கூட்டணி ரன்களும் இதுவே.

நியூசிலாந்து போராட்டம்
242 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. விக்கெட்கள் வீழ்ந்தாலும், ரன் விகிதத்தை குறைக்காமல் ஆடிய அந்த அணி 16.5 ஓவர்களில் 165 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அபார வெற்றி
இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2 - 2 என சமன் செய்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிலர் ஓவருக்கு 25 ரன்கள், 16 ரன்கள், 12 ரன்கள் கொடுத்து பரிதாபமாக காட்சி அளித்தனர்.


Click it and Unblock the Notifications











