மவுண்ட் மவுங்கானுய்: நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்திய நிலையில் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனை அடுத்து மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுய் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஜெமி ஸ்மித் டக் அவுட் ஆகி ஆட்டமிழக்க, பென் டக்கட், ஜோ ரூட், மற்றும் ஜேக்கப் பெத்தல் தலா இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜாஸ் பட்லர் 4 ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 56 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. எனினும் ஹாரி புரூக் மட்டும் தனியாளாக நின்று அதிரடி காட்டினார்.
11 சிக்ஸர், 9 பவுண்டரிகள் என 101 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தினார். இறுதியில் ஜெமி ஓவர்டன் 46 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 35.2 ஓவரில் 223 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர் வில் யங் 5 ரன்களிலும் சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா 17 ரன்களிலும், கேன் வில்லியம்சன் டக் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தனர். எனினும் நடுவரிசையில் விளையாடிய டாரல் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வல் ஆகியோர் பொறுப்புடன் ரன்களை சேர்த்தனர்.
மைக்கேல் பிரேஸ்வெல் 51 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடுகிற டேரல் மிட்செல் 91 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். இறுதியில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி 36.4 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் நியூஸிலாந்த அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ளது.