ஆக்லாந்து: பாகிஸ்தானின் 22 வயது இளம் வீரரான ஹசன் நவாஸ், நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சுப்மன் கில்லின் சர்வதேச கிரிக்கெட் சாதனை ஒன்றையும், பாபர் அசாமின் டி20 சாதனையையும் முறியடித்து உள்ளார்.
ஹசன் நவாஸ் 44 பந்துகளில் சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் ஹசன் நவாஸ் துவக்க வீரராக களமிறங்கி இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்தார்.

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் அவர் 44 பந்துகளில் சதம் அடித்தார். 45 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 233 ஆக இருந்தது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது அவர் இந்த சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம், பாகிஸ்தானுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த பாபர் அசாமின் சாதனையை ஹசன் நவாஸ் முறியடித்தார். 2021 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் பாபர் அசாம் 49 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதுவே பாகிஸ்தான் வீரர் ஒருவரின் அதிவேக சர்வதேச டி20 சதமாக இருந்தது.
அந்த சாதனையை தற்போது ஹசன் நவாஸ் முறியடித்துள்ளார். அவர் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்து மைதானத்தில் 44 பந்துகளில் சதம் அடித்துள்ளார். மேலும், இது சர்வதேச அளவிலும் சாதனையாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையே ஆன சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.
மேலும், பாகிஸ்தான் அணிக்காக மிக இளம் வயதில் சர்வதேச டி20 சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ஹசன் நவாஸ். அவர் இந்த சதத்தை அடித்தபோது அவரது வயது 22 ஆண்டுகள் 212 நாட்கள் ஆகும். இதற்கு முன், 22 ஆண்டுகள் 127 நாட்கள் இருந்தபோது சதம் அடித்த அஹமத் சேஷாத் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் ஹசன் நவாஸ் படைத்துள்ளார். இதற்கு முன், சுப்மன் கில் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அப்போது அவரது வயது 23 ஆண்டுகள் 146 நாட்களாக இருந்தது. அந்த சாதனையை ஹசன் நவாஸ் முறியடித்துள்ளார்.
செய்தி சுருக்கம்: