மாங்குனி : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 578 ரன்களை விளாசினார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார் வீரராக பார்க்கப்பட்டார் ரச்சின் ரவீந்திரா. இதையடுத்து ஒருநாள் மட்டுமல்லாமல் டி20 மற்றும் டெஸ்ட் அணியிலும் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஐசிசி தரப்பில் வழங்கப்பட்ட சிறந்த அறிமுக வீரருக்கான விருதை ரச்சின் ரவீந்திரா வென்றார். அந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே போட்டி இருந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 256 ரன்களை சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
வில்லியம்சன் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க நிலையில், பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். ஆனால் மறுபக்கம் அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தினார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரச்சின் ரவீந்திரா இதுவரை ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. ஆனால் தொடக்கமே இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 366 பந்துகளில் 3 சிக்ஸ், 26 பவுண்டரி உட்பட 240 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இவரின் அதிரடி ஆட்டம் காரணமாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.