சிஎஸ்கே-வால் துரத்தி விடப்பட்ட வீரர் டபுள் செஞ்சுரி.. வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக கான்வே 200 ரன்
மவுண்ட் மவுங்கானு: சிஎஸ்கே அணியின் முன்னாள் தொடக்க வீரர் டெவோன் கான்வே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மீது நம்பிக்கை வைத்து டெவோன் கான்வேவை கழற்றி விட்டது.
ஏலத்தில் கூட அவரை திரும்ப எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார் டெவான் கான்வே.

முதல் விக்கெட்டுக்கு 323 ரன்கள்
நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் டாம் லாதமும், டெவோன் கான்வேவும் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே விண்டீஸ் பந்துவீச்சாளர்களை திணறடித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் 323 ரன்களை குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் டாம் லாதம் 246 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கான்வேவின் 2வது இரட்டை சதம்
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் பாறாங்கல் போல நின்ற கான்வே, விண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். நிதானமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் ஆடிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் 2வது பகுதி ஆட்டத்தின் போது, நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் டெவோன் கான்வே 225 ரன்களுடனும் (360 பந்துகள், 31 பவுண்டரிகள்), ரச்சின் ரவீந்திரா 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
லாதமுக்கு பிறகு நைட் வாட்ச்மேனாக வந்த ஜேக்கப் டஃபி 17 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் 31 ரன்கள் (60 பந்துகள்) எடுத்து கிரீவ்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2026 ஏலத்தில் சிஎஸ்கே அணி கான்வேவை தக்கவைக்கவில்லை. சஞ்சு சாம்சன் வந்த பிறகு துவக்க வீரருக்கான இடம் நிரம்பிவிட்டதாக கருதப்பட்டாலும், கான்வே போன்ற ஒரு நிலையான ஆட்டக்காரரை சிஎஸ்கே இழக்கிறதோ என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்கு அவரது இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications