Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs WI: இதெல்லாம் ஒரு ஸ்கோரா? 15.4 ஓவரில் மேட்சை முடித்த நியூசிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி

நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மற்றும் தீர்க்கமான போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபியின் அனல் பறக்கும் பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன்களின் அதிரடியால், வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியைச் சந்தித்தது.

டுனெடின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கேப்டனின் முடிவைச் சரி என்பது போல, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர்.

NZ vs WI West Indies beaten in 15 4 Overs by New Zealand in 5th T20I Clinch Series with 8-Wicket Win

கைல் ஜேமிசன் இரண்டாவது ஓவரில் அலிக் அதான்சே ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஜேக்கப் டஃபி சரிவை ஏற்படுத்தினார். அந்த ஒரே ஓவரில், கேப்டன் ஷாய் ஹோப் 11 ரன்கள் எடுத்தும், அகீம் அகஸ்டே 8 ரன்கள் எடுத்தும், அதிரடி வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். அவர்கள் அனைவரின் விக்கெட்டையும் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டரை காலி செய்தார் ஜேக்கப் டஃபி.

ஒரு கட்டத்தில், அணியின் சரிவைத் தடுத்து நிறுத்திய ராஸ்டன் சேஸ் (38) மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் (36) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தனர். ஆனாலும், சுழற்பந்து வீச்சாளர்களான சான்ட்னர், சோதி, பிரேஸ்வெல் ஆகியோர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

இறுதியில், மீண்டும் பந்துவீச வந்த டஃபி, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷெப்பர்டின் விக்கெட்டை வீழ்த்தி, தனது நான்காவது விக்கெட்டைப் பதிவு செய்தார். ஜேம்ஸ் நீஷமும் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவர்களில் 140 ரன்களுக்குச் சுருண்டது.

15.4 ஓவரில் எளிதாக சேஸிங்

"இதெல்லாம் ஒரு ஸ்கோரா?" என்பது போல, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, தொடக்க வீரர் டிம் ராபின்சன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். வெறும் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் விளாசி அவர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா (21) மற்றும் மார்க் சாப்மேன் (21) ஆகியோர் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி 15.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 141 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும், இந்தத் தொடரில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேக்கப் டஃபி தட்டிச் சென்றார்.

Story first published: Thursday, November 13, 2025, 13:25 [IST]
Other articles published on Nov 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+