டெல்லி : ஆப்கானிஸ்தான் அணி எப்படி திட்டமிட்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தியது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2௦23 உலகக்கோப்பை தொடரில் வலுவான அணியாக பார்க்கப்பட்டது இங்கிலாந்து அணி. அந்த அணியிடம் நீண்ட பேட்டிங் வரிசையும், அதிக ஆல் - ரவுண்டர்கள் கொண்ட பவுலிங் வரிசையும் இருந்தது.

அதன் காரணமாக இங்கிலாந்து அணியை வீழ்த்துவது கடினம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், சரியான திட்டத்தை கையில் எடுத்த ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே முன்னாள் இந்திய அணி கேப்டன் அஜய் ஜடேஜா தான். இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய சூழ்நிலைகளை பற்றி முழுவதும் தெரிந்த ஒரு ஆலோசகர் தேவை.
இதை சரியாக உணர்ந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட், அஜய் ஜடேஜாவை தற்காலிக ஆலோசகராக அழைத்து வந்தார். அஜய் ஜடேஜா முதல் போட்டியில் இருந்தே ஒரு திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தி வந்தார்.
அதாவது, இந்தியாவில் சுழற் பந்துவீச்சு தான் எடுபடும். அதே போல, ஆப்கானிஸ்தான் அணியின் ஆயுதமும் சுழற் பந்துவீச்சு தான். இப்படி இருக்க, இந்திய அணி உட்பட மற்ற அணிகளைப் போல மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை ஆட வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை விடுத்து சில போட்டிகளில் வெறும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை கூட வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையை கூறி இருக்கிறார்.
இது மற்ற அணிகளுக்கு சரி வராது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட்டில் இத்தனை உயரத்துக்கு வர காரணமே சுழற் பந்துவீச்சு தான். ரஷித் கான், முஹமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகிய மூவரும் அனுபவம் உள்ள சுழற் பந்துவீச்சாளர்கள்.
மூவரின் பந்துகளையும் மற்ற அணிகளின் பேட்ஸ்மேன்கள் சந்திக்க அஞ்சுகிறார்கள். இவர்கள் மூவரும் முழுமையாக 10 ஓவர்களை வீச வைக்க வேண்டும். அதே நேரம் மூவரும் ஒரே ஸ்பெல்லில் மாற்றி, மாற்றி ஓவர்களை வீசக் கூடாது. முதல் ஓவரில் இருந்து குறைந்தது 45வதுஓவர் வரை இவர்களின் பந்துவீச்சு இடம் பெற வேண்டும்.
அப்படி என்றால் மூவரில் ஒருவர் பவர்பிளே ஓவரில் இருந்தே பந்துவீச்சை தொடங்கினால் இதை செய்ய முடியும். முஜீப் உர் ரஹ்மான் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு அதற்காக புதிய பந்தில் பயிற்சியை செய்து இருக்கிறார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பனிப் பொழிவும் இருக்கும், அப்போது முஜீப்புகு பந்து வீசுவது சிரமம் என்பதால் அவர் முதல் ஓவரில் இருந்தே பந்து வீச தயார் ஆனார்.
மத்திய ஓவர்களிலும், கடைசி ஓவர்களிலும் சுழற் பந்து வீசும் பொறுப்பை நபி மற்றும் ரஷித் கான் ஏற்றுக் கொண்டார்கள். இந்த திட்டம் ஆப்கானிஸ்தான் அணி ஆடிய முதல் போட்டியில் இருந்தே செயல்பாட்டுக்கு வந்தது.
ஆனால், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய வங்கதேச அணியும், அடுத்து ஆடிய இந்திய அணியும் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆடும் திறன் கொண்டவர்கள் என்பதால் அந்த அணிகள் வெற்றி பெற்று விட்டன.
ஆனால், இங்கிலாந்து அணி சுழற் பந்துவீச்சில் அதிகம் தடுமாறியதால் தோல்வியை சந்தித்தது. தற்போது ஆப்கானிஸ்தான் அணி இதே திட்டத்தை வைத்து அடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்த முடியும்.
ஆப்கானிஸ்தான் தன் ஆயுதத்தை கூர் தீட்டி களத்தில் இறக்கி இருக்கிறது. இனிதான் உலகக்கோப்பையில் அந்த அணியின் ஆட்டம் உச்சகட்டத்தை எட்டப் போகிறது.