உலகக்கோப்பையா? அதை தூக்கி ஓரமா போடுங்க.. இனி கிரிக்கெட்டே மாறப் போகுது.. காரணமே இதுதான்
மும்பை : 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் நடந்து வரும் அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டில் உலகக்கோப்பை வெல்வது இனி இரண்டாம் பட்சம் தான் என்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி உலகக்கோப்பையை இரண்டாம் பட்சமாக மாற்றும்? என்ற கேள்வி எழலாம். ஆனால், அதுதான் உண்மையில் நடக்கப் போகிறது.
தற்போது கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மிகவும் குறைந்து விட்டன. டி20 போட்டிகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. டி20 போட்டிகளுக்கு தயார் ஆவதும், போட்டி நேரமும் குறைவு என்பதால் வீரர்கள் அதிக களைப்படையாமல் தொடர்ந்து டி20 போட்டிகளில் ஆட முடியும்.

அதன் காரணமாக, இந்திய அணி உள்ளிட்ட முன்னணி அணிகள் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி லீக் ஆகியவற்றிற்காக கட்டாயத்தின் பேரில் ஆடும் போட்டிகளை தவிர, மீதமுள்ள நாட்களில் தொடர்ந்து டி20 தொடர்களில் ஆடி வருகின்றன.
ஒலிம்பிக்கிலும் டி20 கிரிக்கெட் தான் சேர்க்கப்பட்டு இருக்கிறது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்கோப்பை நடந்து வருகிறது. அந்த டி20 உலகக்கோப்பை சாம்பியன் அணி என ஒரு அணி தன்னை சொல்லிக் கொண்டாலும் அதில் பெரிய கவுரவம் இல்லை என்பது தான் உண்மை.
ஒருநாள் போட்டி உலகக்கோப்பை சாம்பியன் அணி என்பது மட்டுமே இப்போதைக்கு கவுரவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால், 2023 உலகக்கோப்பை தொடரை 100 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட இந்தியாவில் நடத்தியும் பெரும்பாலான போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் வரவில்லை. ஒருநாள் கிரிக்கெட் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டதையே இது காட்டுகிறது.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் அதில் தங்கப் பதக்கம் வெல்வதே கிரிக்கெட் அணிகளின் தலையாய கடமையாக மாறும். டி20 உலகக்கோப்பையை விட இனி ஒலிம்பிக் தங்கமே கிரிக்கெட் ரசிகர்களுக்கும் முக்கியமான ஒன்றாக, தங்கள் நாட்டின் கவுரவம் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாறும்.
ஆனால், 2028 ஒலிம்பிக்கில் தான் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட உள்ளது. அதுவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் டி20 உலகக்கோப்பை மற்றும் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை முக்கியமான ஒன்றாக இருக்கும்.
அதே சமயம், பல கிரிக்கெட் அணிகள் 2028 ஒலிம்பிக் தொடருக்கு ஏற்ற இளம் வீரர்களை இப்போதே அண்டர் 19 அணிகளில் அடையாளம் காண வேண்டிய வேலையை தொடங்கும். 2028 முதல் கிரிக்கெட்டின் உயரிய கவுரவமாக ஒலிம்பிக் டி20 தொடர் மாறும். உலகக்கோப்பை போல ஒரே ஒரு சாம்பியன் என்பதை தாண்டி, தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களில் ஒன்றையாவது வெல்ல வேண்டும் என சிறிய அணிகள் கூட போட்டி போடும் என்பதால் சுவாரசியம் கூடும்.
ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அல்லது டி20 உலகக்கோப்பை போல 10 அணிகள், 16 அணிகளை வைத்து ஒலிம்பிக் டி20 போட்டிகளை நடத்தினால் அது சரியாக இருக்காது. எனவே எப்படியும் இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் குரூப் சுற்றில் மோதி, பின் இரண்டாம் சுற்று, காலிறுதி, அரையிறுதி , இறுதிப் போட்டி என பல சுற்றுகளாக அந்த தொடர் பெரிய அளவில் நடைபெறும். ஆக, 2028 முதல் கிரிக்கெட்டின் முகம் மாறப் போகிறது.


Click it and Unblock the Notifications