பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்செனிடம் தோல்வியடைந்தார். இதன் காரணமாக வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசியாவின் லீ ஸி ஜியாவை எதிர்த்து இந்தியாவின் லக்சயா சென் களமிறங்கினார். இதற்கு முன்பாக இவர்கள் இருவரும் விளையாடிய போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் லக்சயா சென் வென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென், முதல் செட்டின் முதல் பாதி முடிவில் 11-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். ஆனால் முதல் செட் பிற்பாதியில் எழுச்சி பெற்ற லீ ஜியா, அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று முன்னேறினார். இருந்தாலும் லக்சயா சென் 17-11 என்று தொடர்ந்து முன்னிலையை தக்க வைத்தார்.

இறுதியாக முதல் செட்டை 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் லக்சயா சென் கைப்பற்றினார். இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை நோக்கி முதல் அடியை லக்சயா சென் எடுத்து வைத்தார். 2வது செட்டிலும் லக்சயா சென் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். ஒரு கட்டத்தில் டிராப் ஷாட் ஆட முயன்ற போது, லக்சயா சென்னின் அபாரமான ஆட்டத்தால் லீ தனது முதுகில் அடி வாங்கினார்.
இதனால் லக்சயா சென் 7-2 என்று முன்னிலையிலேயே இருந்தார். அதன் அடுத்தடுத்து 6 புள்ளிகளை பெற்ற லீ ஸி ஜியா, 10-8 என்று புள்ளிகளில் முன்னிலை பெற்றார். இந்த முன்னிலை 12-8 என்று அதிகமாக, இந்திய ரசிகர்களின் ஆரவாரம் குறையத் தொடங்கியது. இதன்பின் எழுச்சி பெற்ற லக்சயா சென், 4 புள்ளிகளை தொடர்ந்து பெற்று 12-12 என்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்தார்.
லீ ஸி ஜியாவின் தவறுகளுக்காக காத்திருந்ததோடு, அட்டாக்கிலும் லக்சயா சென் ஈடுபட்டது அவருக்கு பலனளித்தது. தொடர்ந்து இருவரும் மாற்றி மாற்றி முன்னிலை பெற்று வந்தனர். இதனால் ஆட்டத்தில் இருந்த பரபரப்பு ரசிகர்களுக்கும் தொற்றி கொண்டது. இறுதியாக இரண்டாவது செட்டை மலேசியாவின் லீ ஸி ஜியா 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட் ஆட்டம் தொடங்கியது. இதில் மலேசியா வீரர் லீ 9-2 என்ற முன்னிலை பெற, லக்சயா சென் தொடர்ச்சியாக தவறுகளை செய்து வந்தார். இதனிடையே அவர் கையில் இருந்த காயத்தில் இருந்து ரத்தமும் வெளி வந்ததால், சூழல் இன்னும் சிக்கலாகியது. பின்னர் லக்சயா சென் ஹாட்ரிக் புள்ளிகளை பெற்ற போதும், ஆட்டத்தில் லீ 10-5 என்ற முன்னிலையை தக்க வைத்து கொண்டார்.
தொடர்ந்து ஆட்டத்தில் மலேசிய வீரர் லீ 14-7 என்று முன்னிலையில் இருக்க, லக்சயா சென் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஒரு கட்டத்தில் ஆட்டம் 19-10 என்ற சென்ற நிலையில், இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர். இறுதியாக 21-11 என்ற கணக்கில் மலேசியா வீரர் லீ ஸி ஜியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். இதனால் லக்சயா சென் 4வது இடத்தில் நிறைவு செய்து சோகத்துடன் வெளியேறினார்.