நாட்டை விட்டே வெளியேறிய கேப்டன்.. பரிசுப் பணத்தால் ஒப்பந்தம் ரத்து.. ஓமன் அணிக்கு வந்த சோதனை!
டெல்லி: 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய ஓமன் அணியின் கேப்டன் காஷ்யப் பிரஜாபதி, அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது அந்த நாட்டின் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்குப் போதிய வீரர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓமன் கிரிக்கெட் வீரர்களுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்றதற்கான பரிசுப் பணத்தை பிரித்து அளிக்கவில்லை என்பதால் அவர்கள் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இதற்காகவே அவர்களது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
ஓமன் குடியுரிமை இல்லாத அந்த வீரர்கள் அனைவரும் ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட விசா பிரச்சனையால் அந்த நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

2024 டி20 உலகக் கோப்பையில் ஓமன் அணி பங்கேற்றிருந்தது. அந்த அணிக்கு பங்கேற்புக்கான பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. அந்த அணிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.90 கோடி ரூபாய்) பரிசாக அளிக்கப்பட்டன.
இந்த பரிசுத் தொகை கிடைத்திருந்தும், அந்த உலகக் கோப்பை பரிசுப் பணம் வீரர்களுக்குப் பிரித்து அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்து அவர்கள் கனடாவில் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடச் சென்றார்கள். அப்போதும் ஓமன் கிரிக்கெட் அமைப்பிடம் தங்களது சேர வேண்டிய பரிசுப் பணம் குறித்து விளக்கம் கேட்டு இருக்கின்றனர்.
ஆனால், அப்போதும் அவர்களுக்கு அது அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஓமன் அணி வீரர்கள் பரிசுப் பணம் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அடுத்து நடைபெற உள்ள ஆசிய கோப்பையில் பங்கேற்காமல் இதற்காகப் போராடலாம் என வீரர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், அவர்களது கிரிக்கெட் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து, ஓமன் குடியுரிமை இல்லாத அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விசா பிரச்சனை காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
அந்த அணியில் உலகக் கோப்பையில் இடம்பிடித்திருந்த 15 வீரர்களில் தற்போது ஐந்து வீரர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், கிரிக்கெட் மூலம் வருமானம் இல்லாத காரணத்தால் வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.
ஓமன் நாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வந்தனர். ஆனால் தற்போது அவர்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், பணி நிமித்தமான விசா முடிவுக்கு வந்துவிட்டது.
இது குறித்து பேசிய ஓமன் அணியின் கேப்டனாக இருந்த காஷ்யப் பிரஜாபதி, "இந்தச் சம்பளப் பிரச்சினையால் எங்கள் வாழ்க்கையே சிக்கலாக மாறிவிட்டது. அணியில் எங்கள் இடத்தை இழந்தோம். எங்களது ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இது மிகவும் குழப்பமாக உள்ளது. ஏன் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு எங்களுக்குச் சேர வேண்டிய பரிசுப் பணம் எங்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா என உறுதி செய்யக் கூடாது? எங்களது புகார்களை பாதுகாப்பாக எழுப்பக்கூடிய இடம் எதுவுமே இல்லையே, அது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications