மும்பை : இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி தனக்கென்று ஒரு தனி வரலாறை படைத்திருக்கிறார். U-19 கிரிக்கெட்டில் தொடங்கி தற்போது உலக கிரிக்கெட் வரை தன்னுடைய பயணத்தை விராட் கோலி வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.
டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலுமே விராட் கோலிக்கு நிகரான ஆள் கிடையாது. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடும் வீரர்களை மட்டுமே கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் சிறந்த வீரர்கள் என ஒத்துக் கொள்வார்கள்.
அப்படி விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு
முதல் முறையாக விளையாடினாலும் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் தான் விராட் கோலி முதல் முறையாக களமிறங்கினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்த விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் தன்னுடைய ஆதிக்கத்தை சிவப்பு நிற கிரிக்கெட்டில் செலுத்த விராட் கோலிக்கு எவ்வித நேரமும் தேவைப்படவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் ஒட்டுமொத்த இந்திய அணியும் 2012 ஆம் ஆண்டு தடுமாறிய நிலையில் அடிலெய்டில் விராட் கோலி மட்டும் சதம் விளாசி அசத்தினார். அப்போதே விராட் கோலி தான் யார் என்பதை நிரூபித்து விட்டார். அதன் பிறகு தொடர்ந்து அவருடைய பேட்டில் இருந்து ரன்கள் வந்து கொண்டே இருந்தது. இதுவரை 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 8,479 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் 28 சதங்களும் 58 அரை சதங்களும் அடங்கும். விராட் கோலியின் சராசரி 50 க்கு மேல் இருந்த நிலையில் தற்போது 48.72 என சரிந்துள்ளது. இதேபோன்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் என்று பெயர் வாங்கியுள்ள விராட் கோலி இந்திய அணி 68 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி 40 போட்டிகளில் வெற்றியும் 17 போட்டிகளில் தோல்வியும் ஐந்து முறை நம்பர் ஒன் டெஸ்ட் அணிக்கான பரிசையும் விராட் கோலி பெற்று கொடுத்திருக்கிறார்.
கேப்டனாக 5864 ரன்கள்,20 சதமும் அதில் 7 இரட்டை சதமும் விராட் கோலி அடித்திருக்கிறார். எனினும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. அண்மையில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி இரட்டை சதத்தை நெருங்கினார். ஆனால் அதன் பிறகு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விராட் கோலி சொதப்பினார்.
தற்போது விராட் கோலியின் சராசரி முதல் முறையாக 50-க்கு கீழ் சென்றிருக்கிறது. தற்போது விராட் கோலி தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மீண்டும் பழையபடி அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு நல்ல வாய்ப்பாக வெஸ்ட் இண்டிஸ் தொடர் இருக்கிறது. உலகின் தற்போது சிறந்த முன்னணி வீரர்களான ஜோ ரூட், ஸ்மித், வில்லியம்சன் ஆகியோர் விராட் கோலியை தற்போது தாண்டி சதத்தில் சென்று விட்டார்கள். இதனால் விராட் கோலி மீண்டும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.