ஒரு போட்டியில் கேட்ச் பிடித்தால் சிறந்த கீப்பரா? பண்ட்-க்கு வந்த பாராட்டை நிறுத்திய மைக்கேல் வாகன்
சென்னை: இங்கிலாந்து டெஸ்டில் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை புகழ்ந்து வரும் நிலையில் மைக்கேல் வாகன் மட்டும் வித்தியாசமான முறையில் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அசத்தினர். குறிப்பாக பண்ட்-ன் ஆட்டம் அனைவரையும் வாய்ப்பிளக்க செய்தது.
இதற்காக பண்ட்-ஐ அனைவரும் பாராட்டி வரும் நிலையில் மைக்கேல் வாகனின் பேச்சு பண்ட்-க்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் பண்ட்
இளம் வீரர் ரிஷப் பண்ட்-க்கு ஆஸ்திரேலிய தொடரில் மீண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அவர் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். இங்கிலாந்துடனான 2வது டெஸ்டிலும் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார்.

வாயடைத்த பண்ட்
பேட்டிங்கில் அதிரடி காட்டினாலும் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார். கீப்பிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது டெஸ்டில் பண்ட் கீப்பிங்கில் அசத்தினார்.

பாராட்டு
முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட் ஒற்றை கையில் தாவி கேட்ச் பிடித்து அசத்தினார். அதே போல் ஜாக் லீச்சை வெளியேற்றியது மற்றும் டேனியல் லாரன்ஸ், மொயின் அலி ஆகியோரை ஸ்டம்பிங் செய்து வியக்க வைத்தார். இதற்கு பல முன்னணி வீரர்களும், பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இது போதாது
2வது டெஸ்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற அர்த்தம் இல்லை. எப்போதும் பந்தை நழுவ விடாமல் பிடிக்க வேண்டும். கீப்பிங்கில் பண்ட் இன்னும் பல போட்டிகளை பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications