மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளை அடைந்து முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு சென்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து அதிகாரப்பூர்வமாக அரை இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா அரையிறுதி சுற்றுக்கு நாங்கள் தகுதி பெற்று விட்டோம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்களுடைய முதல் குறிக்கோளை இதுதான்.
அதிலிருந்து அரை இறுதிப் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து அணுக வேண்டும். லீக் சுற்றில் முதல் ஏழு ஆட்டங்களில் நாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பது பாராட்டுக்குரியது. அணியின் பல வீரர்கள் இந்த வெற்றிக்கு தங்களுடைய பங்கை ஆற்று இருக்கிறார்கள். முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்து விளையாடுவது மிகவும் சவாலான விஷயமாகவே இருந்தது.
இது போன்ற ஒரு ஆட்டத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். பேட்ஸ்மேன்களுக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். அதேபோல் வேகபந்துவீச்சாளர்கள் செயல்பாடுகளும் பிரமிக்கும் வகையில் இருந்தது. ஸ்ரேயாஸ் இன்று தன்னுடைய தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் யாரென்று நிரூபித்து விட்டார். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவர் செயல்பட்டார்.
தொடர்ந்து அவர் கடின உழைப்பை பயிற்சியில் செய்து வருகிறார். அதன் வெளிப்பாட்டை தான் நாம் இன்று கண்டோம். சிராஜை பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் திறமை வாய்ந்த வீரர். அவர் எப்போதெல்லாம் சிறப்பாக பந்து வீசுகிறாரோ அது எங்களுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஒரு அணியாக நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். கடந்த போட்டியில் சூரியகுமார் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் போன்றோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவது, மேலும் வேக பந்துவீச்சாளர்கள் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது எல்லாம் நல்ல விஷயமாக பார்க்கின்றேன்.
டிஆர்எஸ் முடிவை எடுப்பது குறித்து ராகுல் மற்றும் பவுலர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டேன். அவர்கள் தான் எனக்காக முடிவெடுக்க வேண்டும். சில சமயம் சரியாக இருக்கும், சில சமயம் தவறாக கூட போகலாம். அடுத்தது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்களும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் நல்ல ஆட்டமாக அமையும் என நம்புகிறேன் என்று ரோகித் கூறினார்.