அஸ்வின்தான் எங்களுக்குப் பெரிய மிரட்டலாக இருப்பார்.. டூப்ளஸிஸ்
மொஹாலி: அஸ்வின் அபாரமான பந்து வீச்சாளர். அவர்தான் எங்களுக்கு டெஸ்ட் தொடரில் பெரும் மிரட்டலாக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் பாப் டூப்ளஸிஸ் கூறியுள்ளார்.
இந்தியாவுடான டுவென்டி 20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை வென்று விட்டது தென் ஆப்பிரிக்கா. அடுத்து டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.
நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி மொஹாலியில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக இப்போதே திட்டமிட ஆரம்பித்து விட்டனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். இப்போட்டித் தொடர் குறித்து டூப்ளஸிஸ் கூறியுள்ளதாவது...

முதல் நாளிலேயே சவால் இருக்கும்
இந்த பிட்ச்சைப் பொறுத்தவரை முதல் நாளிலேயே பந்து சுழலும் என எதிர்பார்க்கிறோம். அதை எதிர்பார்த்தே இருக்கிறோம். எனவே அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறோம்.

முன்பு போல இல்லை
இந்தியாவில் உள்ள பிட்ச்சுகளில் முன்பெல்லாம் 3வது, 4வது அல்லது ஐந்தாவது நாளில்தான் பந்துகள் சுழல ஆரம்பிக்கும். ஆனால் இப்போது முதல் நாளிலேயே சுழல ஆரம்பித்து விடுகிறது.

சீக்கிரமே முடியும்
பந்து முதல் நாளிலேயே சுழல ஆரம்பித்து விடுவதால் டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நீடிக்குமா என்பது சந்தேகம்தான். 3 நாட்கள் வரை நீடித்தாலே பெரிது. எனவே நாங்கள் சற்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.

அஸ்வின் அபாயம்
அஸ்வின் அபாயகரமானவர். காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் டெஸ்ட் தொடருக்குத் திரும்பி வருகிறார். அவர் நிச்சயம் மிகப் பெரிய மிரட்டலாக இருப்பார்.

அடிப்போம்
அவர் அருமையான பந்து வீச்சாளராக இருந்தாலும் கூட டுவென்டி 20 போட்டிகளில் அவரை சிறப்பாக சமாளித்தோம். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரை திறம்பட சமாளிக்க முடியும் என நம்புகிறேன்.

அஸ்வினுக்கு தனி வியூகம்
அஸ்வின் வியூகத்தை உடைத்து நாங்களும் வியூகம் அமைத்து ஆடுவோம். அவரது பந்துகளை எப்படி ஆடுவது என்பது குறித்து திட்டமிடுவோம். நிச்சயம் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் டூப்ளஸிஸ்.


Click it and Unblock the Notifications