இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி விவரங்களை கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்!
சென்னை: கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆடினால் ரசிகர்களுக்கு அல்வாதான். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் லீக் போட்டியைப் பற்றி விவரம் கேட்டு அன்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூகுளின் தேடல் இயந்திரத்தைப் பயன்படுத்தியதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக கோப்பை போட்டிகளின் போது நடந்த தேடல்கள் குறித்த தனது சமீபத்திய பகுப்பாய்வை கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது 'லைவ் கிரிக்கெட் ஸ்கோர்' மற்றும் பல தேடல் வார்த்தைகளை உபயோகித்து 10 லட்சம் பேருக்கும் மேல் கிரிக்கெட் நிலவரம் பற்றி கூகுளில் அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளது.
இது தவிர, அன்றைய தினத்தில் மட்டும் பாகிஸ்தான் அணியைப் பற்றி விவரம் கேட்டு, 1 லட்சம் பேர் கூகுள் தேடல் இயந்திரத்தைப் பயன்படுத்தியதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல நடப்பு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் எப்படி இருக்கும்? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதைப்பற்றிய தகவல்களைத் தேடி தேடி படிக்க ஆரம்பித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications