ஒட்டுக்கா பார்த்தா 'பென்டாஸ்ட்டிக்'தான்.. டோணி
டர்பன்: 2வது டெஸ்ட் போட்டியில் தோற்று, டெஸ்ட் தொடரையும் நாம் இழந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்தத் தொடர் நமக்கு அற்புதமாக அமைந்தது என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலும் கூட, 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து விட்டது.
இதன் காரணமாக 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை தட்டிச் சென்று விட்டது. இதன் மூலம் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் இந்தியா எந்தத் தொடரையும் வென்றதில்லை என்ற வரலாறு தொடரும் அவல நிலை ஏற்பட்டு விட்டது.
இருப்பினும் இந்தத் தொடர் இந்தியாவுக்கு நன்றாகவே இருந்ததாக டோணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி...

சடசடவென விக்கெட் வீழ்ந்ததே காரணம்
கடைசி நாளின் காலையில் சடசடவென நாம் விக்கெட்களை இழந்ததே தோல்விக்கு முக்கியக் காரணம். நடுவர்களின் சில தவறான தீர்ப்புகளும் நமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விட்டன.

வீரர்கள் சிறப்பாகவே ஆடினர்
இருப்பினும் இந்தத் தொடரில் நமது வீரர்கள் சிறப்பாகவே, பாராட்டும் படியாகவே விளையாடினர் என்பதை மறுக்க முடியாது.

மோசமாகவும் ஆடினோம், நன்றாகவும் ஆடினோம்
இரு டெஸ்ட் போட்டிகளிலுமே நாம் சில நேரங்களில் மோசமாகவும் ஆடினோம். அதேசமயம், நன்றாகவும் ஆடினோம். இரு போட்டிகளிலும் அது பிரதிபலித்தது.

நன்றாகத்தான் தொடங்கினோம்
2வது டெஸ்ட் போட்டியில் நமது ஆரம்பம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நாம் சுதாரிக்காமல் போய் விட்டோம். இந்த தொடர் நமது இளம் வீரர்களுக்கு நல்ல படிப்பினையாகும். நிறைய கற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பென்டாஸ்டிக்தான்
ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால், இந்தத் தொடர் பென்டாஸ்ட்டிக்காகவே இருந்தது. இருப்பினும் இன்னும் நன்றாக செய்திருக்கலாம்.

டிஆர்எஸ் மீது நம்பிக்கையில்லை
டிஆர்எஸ் முறை இருந்திருந்தால் நடுவர்களின் தவறான தீர்ப்புகள் மாறியிருக்கலாம் என்று சொல்வது குறித்து நான் உறுதியாக தெரிவிக்க முடியாது. தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையை முழுமையாக ஏற்க முடியாத நிலையில்தான் நாம் உள்ளோம் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications