அயர்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்.. காலிறுதியில் ஆஸி.யுடன் 'ஆசிட் டெஸ்ட்'!
அடிலைட்: உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெற்று விட்டது. இன்று நடந்த முக்கியமான போட்டியில் அது அயர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.
அயர்லாந்து அணி இந்தத் தோல்வியுடன் தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது.
அடிலைடில் இன்று நடந்த போட்டியில் அயர்லாந்து முதலில் பேட் செய்தது. அதில் கேப்டன் போர்ட்டர்பீல்ட் அபாரமாக ஆடி அசத்தலாக சதம் அடித்தார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணி தனது வெற்றி இலக்கை நிதானமாக ஆடி எட்டிப் பிடித்தது. 46.1 ஓவர்கள் வரை நீண்ட போட்டியில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை எடுதச்து வென்றது.
இன்றைய போட்டி பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல், அயர்லாந்துக்கும் கூட முக்கியமானதாக இருந்தது. காரணம், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளும் தலா 6 புள்ளிகளுடன் சம நிலையில் இருந்தன.
இதனால் காலிறுதிக்கு முன்னேறப் போகும் அணி யார் என்பதில் சிக்கல் இருந்தது. ரன் ரேட் அடிப்படையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் 4வது இடத்திலும், அயர்லாந்து 5வது இடத்திலும் இருந்தன.
இன்று அயர்லாந்து வென்றிருந்தால் அது 3வது இடத்திற்கு வந்திருக்கும், பாகிஸ்தான் வெளியேறியிருக்கும். எனவேதான் பாகிஸ்தான் வெற்றியை குறி வைத்து இன்று விளையாட வேண்டியிருந்தது. அதன்படியே அந்த அணி அபாரமான வெற்றியைப் பெற்று காலிறுதிக்குள் நுழைந்து விட்டது.
அயர்லாந்து அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்ட் மிகச் சிறப்பாக விளையாடி சதம் போட்டார். 107 ரன்கள் எடுத்த அவருக்குப் பின்னால் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. எல்லாம் வருவதும், கட்டையைப் போடுவதும், போவதுமாகவே இருந்தனர்.
இதனால் 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து.
பின்னர் விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அகமது செஷாத்தும், சர்பிராஸ், அஹமதும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் பிரமாதமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்களைச் சேர்த்தனர்.
செஷாத் 63 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சர்பிராஸ், கடைசி வரை ஆட்டமிழக்காமல், 101 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்த மிஸ்பா உல் ஹக் 39 ரன்களும், உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 20 ரன்களையும் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவுடன் காலிறுதி மோதல்
தற்போது காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications