அடித்துக் கொண்ட பாக். பந்து வீச்சாளர்கள்- அபராதம் விதித்த கிரிக்கெட் வாரியம்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மேலும் ஒரு சிக்கலாக குல், ஆமிர் அடிதடி வந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 141 ரன்களில் வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் வெற்றியைக் கொண்டாடினர். அப்போது குல்லுக்கும், ஆமிருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்ததாம்.
இந்த மோதல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல் போய் இருவரையும் விசாரித்தது. இதில் இருவரும் நடத்தை விதிமுறையை மீறி நடந்து கொண்டதால் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதித்ததாம் கிரிக்கெட் வாரியம்.
ஆனால் இந்த செய்தியை அணி மேனேஜர் அப்துல் ரக்கீப் மறுத்துள்ளார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. டிரஸ்ஸிங் ரூமில் அமைதியான சூழல்தான் காணப்பட்டது என்றார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அணி பல்வேறு சிக்கல்களில் மாட்டித் தவிக்கிறது.
நியூசிலாந்து தொடருக்கு முன் கேப்டன் யூனிஸ் கான் குறித்து பல சர்ச்சைகள் வெடித்தன. இதையடுத்து அவரை நிறுத்தி விட்டு சீனியர் வீரரான முகம்மது யூசுப்பை கேப்டனாக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
டுனிடின் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. ஆனால் வெல்லிங்டனில் நடந்த 2வது போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் அதன் முக்கிய வேகப் பந்து வீச்சாளர்கள் அடித்துக் கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications