நீங்கள் என் கால்களை தொடலாமா.. உதவ முன்வந்த முகமது நபி.. மரியாதை கொடுத்து விலகிய பாபர் அசாம்!
சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபிக்கு மரியாதை அளிக்கும் வகையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் செயல்பட்ட சம்பவம் ரசிகரக்ளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சென்னை ரசிகர்கள் இரு அணிகளுக்கும் ஆதரவளித்தனர்.

அகமதாபாத் மைதானத்தை போல் அல்லாமல் சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆதரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் மாதிரி ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். இன்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் அரைசதம் விளாசிய போது, சேப்பாக்கம் மைதானமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர். இந்த நிலையில் பேட்டிங்கின் போது பாபர் அசாம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அவர் மீது கூடுதல் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
பாபர் அசாம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரின் ஷூ லேஸ் அவிழ்ந்தது. இதனால் ஷூ லேஸை கட்டுவதற்காக பாபர் அசாம், யாரின் உதவியையும் நாடாமல் கைகளில் அணிந்திருந்த கிளஸை கழற்றிவிட்டு ஷூ லேஸை கட்ட முயற்சித்தார். இதனை பார்த்து கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர் முகமது நபி, அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்.
பாபர் அசாம் அணிந்திருந்த ஷூ லேஸை கட்ட நேரடியாக நபி முயற்சித்த போது உடனடியாக கால்களை நகர்த்தி அவராகவே ஷூ லேஸை கட்டி கொண்டார். எதிரணியை சேர்ந்த வீரர் என்றாலும் மூத்த வீரர் என்ற மரியாதையுடன் பாபர் அசாம் செயல்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications