மெல்போர்ன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா பிரம்மாண்ட ஒருநாள் போட்டி சாதனையை செய்து இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது ஆஸ்திரேலியா அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் 44 ரன்கள், பின்வரிசை வீரர் நசீம் ஷா 40 ரன்கள் எடுத்து இருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்களும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். ஸீன் அபாட் ஒரு விக்கெட், மார்னஸ் லாபுசேன் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்கள், ஜோஸ் இங்லிஸ் 49 ரன்களும் எடுத்து இருந்தனர். ஆனால் அதன் பின் 139 ரன்கள் எடுத்த நிலையில் வரிசையாக மூன்று விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா. அதன் பின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒன்பதாம் வரிசையில் இறங்கி அணியின் வெற்றிக்காக தனி ஆளாக போராடினார்.
33.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டியது. கம்மின்ஸ் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து இருந்தார். ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 71 வது ஒருநாள் போட்டி வெற்றி ஆகும்.
இதற்கு முன் பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணியும் 71 முறை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறது. ஆனால், அதைவிட 28 போட்டிகள் குறைவாக விளையாடி உள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியை 71 முறை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தி இருக்கிறது.
ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் ஆஸ்திரேலியா 71 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான அணிகள் 137 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் 71 முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது.
இந்த பட்டியலில் இலங்கை அணி மூன்றாவதாக இடம் பெற்று இருக்கிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 157 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் இலங்கை அணி 59 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் 135 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் இந்தியா 57 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக 73 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.