PAK vs AUS - நீங்க அவ்வளவு நல்லவரா? ஏமாற்றுக்காரன் என திட்டிய வீரருக்கு டேவிட் வார்னர் தந்த பதில்
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்காக இரண்டு அணி வீரர்களுமே மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய கடைசி டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர் விளையாடுவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய சொந்த மண்ணில் மூன்றாவது டெஸ்ட் போட்டி விளையாட டேவிட் வானர் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கு முன்னாள் வீரர் மிச்செல் ஜான்சன் கடுமையாக திட்டி இருக்கிறார். சாண்ட் பேப்பர் சர்ச்சையில் சிக்கிய டேவிட் வார்னர் போன்ற ஒரு ஏமாற்றுக்காரருக்கு ஹீரோ போன்று பிரியாவிடை அளிப்பதை ஏற்க முடியாது என்று மிட்செல் ஜான்சன் டேவிட் வார்னரை கடுமையாக சாடி இருந்தார்.
மிட்செல் ஜான்சனின் இந்த கருத்தால் அவர் கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் டேவிட் வார்னர் பேசினார். அப்போது மிட்செல் ஜான்சன் உங்களை கடுமையாக பேசி இருக்கிறாரே. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த டேவிட் வார்னர் ஊடகங்களுக்கு இந்த கோடைகாலத்தில் அனைத்துமே தலைப்புச் செய்தியாக கிடைத்து விடுகிறது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், அனைவருக்குமே தங்களுடைய கருத்தை கூறுவதற்கு உரிமை இருக்கிறது. அதில் நாம் எதுவுமே செய்ய முடியாது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். நான் தற்போது ஒரு நல்ல டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு ஆயத்தமாகி வருகிறேன். என்னுடைய பெற்றோர்கள் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து போராட வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் உலக நடப்புக்கு செல்லும் போது நீங்கள் எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கும். உங்கள் மீது பலரும் பல குற்றச்சாட்டையும் விமர்சனத்தையும் வைப்பார்கள். அதைக் குறித்து எல்லாம் கவலைப்படக்கூடாது. கடந்த சில வருடங்களாக நாங்கள் பல சவால்களை சந்தித்து வருகிறோம்.
அதில் 2023 ஆம் ஆண்டு தான் எங்களுக்கு ஒரு சிறப்பானது ஆண்டாக அமைந்தது. தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் காலம் வருகிறது. அதில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. நாம் நல்ல விஷயங்கள் குறித்து தான் பேச வேண்டுமே தவிர ஜான்சனின் பேச்சைக் குறித்து அல்ல என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications