இரட்டை சதம் விளாசிய புதிய பாகிஸ்தான் கேப்டன்.. பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங்கில் கெத்து
கென்பேரா : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பாகிஸ்தானின் வீரர்கள் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மூன்று பிரிவுகளிலும் கேப்டனாக இருந்த பாபர் அசாம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய கேப்டனாக ஷான் மசூத் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பிரைம் மினிஸ்டர் லெவன் அணியுடன் பாகிஸ்தான் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய இமாம் உல் ஹக் 9 ரன்களில் ஆட்டம் இழக்க அப்துல்லா ஷபிக் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஆக பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கிய சான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார்.
முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 40 ரன்களும், சவுத் சகிப் 13 ரன்களிலும் சப்ராஸ் அஹமத் 47 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் தனி ஆளாக நின்று அபாரமாக விளையாடிய சான் மசூத் 298 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் அணியில் ஜார்டன் பக்கிங்கம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் மார்கஸ் ஹாரிஸ் 49 ரன்கள் சேர்த்தார். கேமரூன் பான்கிராப்ட் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தற்போது கேமரான் கிரீன் மற்றும் மேட் ரீன்சா ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் குர்ராம் ஷாசாத் மற்றும் அப்ரார் அகமத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Story first published: Thursday, December 7, 2023, 17:38 [IST]
Other articles published on Dec 7, 2023


Click it and Unblock the Notifications