ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி எடுத்த சில முட்டாள்தனமான முடிவுகளால் முதல் இன்னிங்க்ஸில் அந்த அணி 117 ரன்கள் பின்தங்கியது. இதை அடுத்து ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் அவசரப்பட்டு டிக்ளர் செய்ததை கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் அந்த அணியின் துவக்க வீரர் சயிம் அயூப் 56 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுது ஷகீல் 141 ரன்கள் எடுத்தார். முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதை பார்க்க பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முத்தால் இன்னிங்க்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தார். முதல் போட்டி நடந்த வரும் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கிறது என்பது பாகிஸ்தான அணியின் ரன் குவிப்பில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது. அந்த சூழ்நிலையில் 500 ரன்கள் முதல் 600 ரன்கள் வரை எடுத்த பின்னரே பாகிஸ்தான் அணி டிக்ளர் செய்திருக்க வேண்டும்.
ஆனால், 4 விக்கெட்கள் கையில் இருந்த நிலையில் 448 ரன்கள் எடுத்ததே போதும் என நினைத்து, வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட்டு டிக்ளர் செய்தது பாகிஸ்தான் அணி. மேலும், பேட்டிங் செய்த போது பிட்ச்சின் தன்மையை உணராத பாகிஸ்தான், பந்து வீச்சிலும் சொதப்பியது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச வீரர்கள் தொடர்ந்து ரன் குவித்து வந்த நிலையில் பாகிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை.
மாறாக நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மாற்றி மாற்றி பந்து வீசினார்கள். பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட வங்கதேச வீரர்கள் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணியின் சாத்மன் இஸ்லாம் 93 ரன்கள் எடுத்தார். மூத்த வீரர் முஷ்பிகூர் ரஹீம் 191 ரன்கள் எடுத்து 9 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். மொமினுல் ஹக் 50 ரன்கள் சேர்த்தார். லிட்டன் தாஸ் 56 ரன்களும், மெஹிதி ஹாசன் மிராஸ் 77 ரன்களும் குவித்தனர்.
ஐந்து பேட்ஸ்மேன்கள் அரை சதத்தை கடந்து ரன் குவித்ததை அடுத்து வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 565 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்க்ஸில் வங்கதேசம் 117 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணி அவசரப்பட்டு 448 ரன்கள் எடுத்ததோடு டிக்ளர் செய்ததை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழந்து 23 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட்டில் இன்னும் ஒரு நாளே மீதம் இருக்கும் நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது.