ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதற்கு முன் டிக்ளேர் செய்த பாகிஸ்தான் கேப்டன்.. வங்கதேச டெஸ்டில் சர்ச்சை
ராவல்பிண்டி : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கேப்டன் திடீரென்று டிக்ளேர் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளிலேயே இவ்வாறு டிக்ளேர் செய்தது தான் தற்போது பிரச்சினையை கிளப்பியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக பெரும்பான்மையான போட்டி நடைபெறவில்லை. அதன் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து சயிம் அயூப் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் அரை சதம் அடிக்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. களத்தில் நின்ற சவுத் சக்கில் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி அபாரமாக விளையாடி பாகிஸ்தான் அணியின் இன்னிங்சை கட்டமைத்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தடுமாறினர். அபாரமாக விளையாடிய சவுத் சக்கில் 141 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். சதத்தைக் கடந்து முஹம்மது ரிஸ்வான் அபாரமாக விளையாடி வந்தார்.
இந்த நிலையில் முஹம்மது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருக்க ஆட்டத்தில் இன்னும் மூன்று நாட்கள் எஞ்சி இருந்தது. ரிஸ்வான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் இன்னும் 29 ரன்கள் அடித்திருந்தால் அவர் இரட்டை சதத்தை அடித்திருப்பார்.
இரண்டாவது நாள் ஆட்டமும் முடிவதற்கு பல ஓவர்கள் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் திடீரென்று பாகிஸ்தான் இன்னிங்ஸ் டிக்ளர் செய்தார். இதனால் ரிஸ்வான் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. இதை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் வங்கதேச அணி 12 ஒவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது.
வங்கதேச விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் கேப்டன் இந்த முடிவை எடுத்திருந்தாலும், இது தவறாக பார்க்கப்படுகிறது. ரிஸ்வான் இரட்டை சதம் அடிக்க கூடாது என்பதற்காக அவர் இப்படி செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications