ஹாங்சோ : ஆசிய விளையாட்டில் மிகவும் பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேசம் வெண்கலம் வென்றது.
இப்படி ஒரு போட்டியை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று சொல்வது போல நடந்து முடிந்து இருக்கிறது பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையே ஆன ஆசிய விளையாட்டுப் டி20 கிரிக்கெட் போட்டி.

அரையிறுதியில் இந்தியாவிடம் வங்கதேசமும், ஆப்கானிஸ்தான் அணியிடம், பாகிஸ்தான் அணியும் தோல்வி அடைந்தன. இதை அடுத்து தோல்வி அடைந்த இரு அணிகளும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதின.
போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்க வேண்டும். ஆனால், மழை காரணமாக போட்டி தாமதமாகவே துவங்கியது. வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் குஷ்டில் ஷா 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் மிர்ஸா பைக் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ஆடி வந்தார்.
பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்து இருந்த போது மழை பெய்தது. அதனால் போட்டி மீண்டும் தடைபட்டது. பின் அத்துடன் பாகிஸ்தான் இன்னிங்க்ஸ் முடித்து கொள்ளப்பட்டு டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 5 ஓவர்களில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இது சற்று கடின இலக்கு தான் என்றாலும் விக்கெட் வீழ்ச்சியை பற்றி பெரிதாக யோசிக்காமல் ஆடினால் இலக்கை எட்ட முடியும்.
ஒரு ஓவருக்கு 13 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி இலக்கை எட்ட முடியும் என்ற இக்கட்டான நிலையில் வங்கதேசம் ஆடியது. அந்த அணி விக்கெட் இழப்பை பற்றி கவலைப்படாமல் பவுண்டரி அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தது. அந்த திட்டம் வங்கதேசத்தை சரியான பாதையில் அழைத்துச் சென்றது.
முதல் ஓவரில் துவக்க வீரர் ஜாகிர் மற்றும் அடுத்து வந்த சாய்ப் அடுத்தடுத்த பந்துகளில் டக் அவுட் ஆனார்கள். ஆனால், அதே ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 9 ரன்கள் எடுத்தது வங்கதேசம். இரண்டாவது ஓவரில் நான்கு ஃபோர் உட்பட 19 ரன்கள் குவித்தது.

மூன்றாவது ஓவரில் இரண்டு ஃபோர் உட்பட 12 ரன்கள் எடுத்தது. நான்காவது ஓவரில் ஒரே ஒரு ஃபோர் அடித்து ஒரு விக்கெட்டையும் இழந்தது வங்கதேசம். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது அந்த அணி.
கடைசி ஓவரை வங்கதேசத்தின் யாசிர் அலி சந்தித்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் கிடைத்தது. மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். நான்காவது பந்தில் மீண்டும் இரண்டு ரன்கள் ஓடினார். ஐந்தாவது பந்தில் துரதிர்ஷ்டவசமாக அவர் இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.
ரகிபுல் ஹசன் களத்துக்கு வந்தார். கடைசி பந்தில் ஒரு ஃபோர் அடித்தார். வங்கதேசம் இந்தப் போட்டியில் கடைசி பந்து வரை போராடி வெற்றி பெற்றது. இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தையும் அந்த அணி வென்றது.